
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்குத் திரும்பினார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை உலகமே கொண்டாடி வரும் நிலையில், அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டம், ஜுலாசன் கிராமத்தில், அவர் பாதுகாப்பாக பூமி திரும்ப வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிவிட்டார் என்று செய்தி வெளியானதும் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் பிறந்தது 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில். இவர்களது பெற்றோர் தீபக் பாண்டியா - போன்னி பான்டியா.
இவரது தந்தை தீபக் பாண்டியா, நரம்பியல் நிபுணர் (நியூரோசயின்டிஸ்ட்). 1957ஆம் ஆண்டு இவர் வேலைக்காக அமெரிக்கா சென்று, அங்கு உர்சுலைன் போன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் சுனிதா வில்லியம்ஸ். சுனிதாவின் தந்தையின் பூர்வீகம் குஜராத் மாநிலத்தின் ஒரு அழகிய கிராமம் என்பதே, இந்தியாவுக்கும் சுனிதாவுக்கும் உள்ள தொடர்பு.
பூமிக்குத் திரும்பிய சுனிதா
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் சேர்த்து பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.
சுனிதா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..
குஜராத்தில் சொந்த கிராமம்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரரான பிறகு மூன்று முறை, அதாவது 1972, 2007, 2013-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு குறிப்பாக அவரது சொந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ளார்.
சமோசா பிரியர்..
சர்வதேச விண்வெளி மையத்தில் சமோசா சாப்பிட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் கூறுகையில், எனக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் சில பொருள்களை என்னுடன் வைத்திருக்க விரும்பினேன். அதில் ஒன்றுதான் சமோசா. எப்படியோ எனது குடும்பத்தினர் நாசாவுடன் இணைந்து எங்களுக்கு வரும் ஒரு பெட்டகத்தில் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட சமோசாக்களை அனுப்பியிருந்தனர்.
பணியின்போது, சாப்பிட வைக்கப்பட்டிருந்த பொருள்களில் சமோசா இருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தேன் என்றார்.
விநாயகர் பக்தை
விநாயகர் பக்தையாக இருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். எனது உறவினர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்காக சிறப்பான சில விஷயங்களை நான் எடுத்து வர திட்டமிட்டிருக்கிறேன். அதில் விநாயகரும் இருப்பார். ஏனென்றால் எனக்கு விநாயகர்தான் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவராக இருக்கிறார். நான் ஒரு ஆன்மிகவாதிதான். விநாயகர் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று நம்புகிறேன். அவர் என்னை வழிநடத்துகிறார் என்றும் கூறியிருந்தார்.
கல்பனாவுடன் நட்பு
மற்றொரு இந்திய வம்சாவளி வீரரான கல்பனா சாவ்லாவுடன் நல்ல நட்பு பாராட்டியவர் சுனிதா வில்லியம்ஸ். இது பற்றி அவர் கூறுகையில், நாசாவில் நாங்கள் இருவரும் இணைந்த பிறகு, முதல் முறையாக சந்தித்தபோதே நட்பும் தொடங்கிவிட்டது.
நாங்கள் ஒன்றாக பழகினோம், வெளியே செல்வோம், பைக் ஓட்டுவோம், நிறைய பேசுவோம். அவர் அப்படித்தான், யாரும் அவரைப் பார்த்ததுமே பிடித்துவிடும். எங்கள் இருவரின் பின்னணியும் ஒன்றுபோல இருந்தது, எங்கள் பெற்றோர் இந்தியர்கள் என்பது என பல விஷயங்கள் எங்களை நட்பு வட்டத்துக்குள் கொண்டு வந்தது என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.