
புது தில்லி : தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து தீயணைப்புத்துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தில்லி தீயணைப்புத்துறை விளக்கமளித்துள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இந்த நிலையில், தில்லியிலுள்ள அவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தின்போது, அந்த வீட்டிலுள்ல ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
தீ விபத்து நேரிட்டபோது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டில், மொத்தம் ரூ. 37 கோடி அளவில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தில்லியிலிருந்து நீதிபதி வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நீதிபதியின் வீட்டிலிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை நாஙக்ள் பணத்தை பார்க்கவும் இல்லை என்று தில்லி தீயணைப்புத்துறை விளக்கமளித்துள்ளது.
தில்லி தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி அதுல் கார்க் இன்று(மார்ச் 21) செய்தியாளர்களுடன் பேசியதாவது: “தில்லியிலுள்ள நீதிபதி வர்மா லட்டியென்சின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கடந்த மார்ச் 14 இரவு 11.35 மணிளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. அங்கே குடோனில் தீ பரவியதைத் தொடர்ந்து, வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திலிருந்து பணத்தையோ அல்லது விலையுயர்ந்த பொருள்களையோ கைப்பற்றவில்லை; பார்க்கவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.