
புது தில்லி: தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் நேரிட்ட தீ விபத்தின்போது, அங்கு கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தீ விபத்து நேரிட்டபோது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில், மொத்தம் 37 கோடி அளவில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 14ஆம் தேதி தில்லி நகரப் பகுதியில் இருந்த நீதிபதியின் வீட்டில் தீ விபத்து நேரிட்டது. அப்போது வீட்டில் யஷ்வந்த் சர்மா இல்லை. தீயை அணைக்க அவரது குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தபோதுதான், வீட்டுக்குள் கட்டுக்கட்டாக பணம் எரிந்து கொண்டிருப்பதையும், மற்றொரு அறையில் ஏராளமான பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர்.
தனது வீட்டில் பணம் சிக்கிய நிலையில் அதுபற்றி அவர் விளக்கம் அளிக்காததால், அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம், அவரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், ரூ.11 கோடி பணம் எரிந்துவிட்டதாகவும், இவை அனைத்துமே கணக்கில் வராத பணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து யஷ்வந்த் தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்படலாம், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் விரைவில் உள்விசாரணை தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் யஷ்வந்த் வர்மா. இதனால், அவர் மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.