
நாக்பூர் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஃபாஹிம் கான் வீட்டை, ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
கீழ் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட வீட்டை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து நாக்பூர் நகராட்சியின் உதவி பொறியாளர் சுனில் கூறுகையில், முக்கியக் குற்றவாளி ஃபாஹிம் கான் வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, வீட்டில் 24 மணி நேரத்துக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கால அவகாசம் முடிந்தநிலையில் இன்று காலை வீடு இடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நாக்புரியில் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
பொதுமக்களின் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்திய வன்முறையாளா்கள், போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா். 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்த இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 8 பேரும் அடங்குவா். ஃபாஹிம் கான் உள்பட 6 போ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறை தொடா்பான 5 வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 200 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். கலவரத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் 1,000 பேரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.