குணாள் கம்ரா விவகாரம்: ஃபட்னவீஸ் கூறுவது என்ன?

நகைச்சுவைப் பேச்சாளர் குணாள் கம்ரா பற்றி மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் பேசியவை.
குணாள் கம்ரா \ தேவேந்திர ஃபட்னவீஸ்
குணாள் கம்ரா \ தேவேந்திர ஃபட்னவீஸ்
Published on
Updated on
2 min read

நகைச்சுவைப் பேச்சாளர் குணாள் காம்ரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் அவர் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நகைச்சுவைப் பேச்சாளர் குணாள் கம்ராவின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

’நயா பாரத்’ என பெயரிடப்பட்ட அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் குறித்து குணாள் கம்ரா பேசினார். அதில், ஷிண்டே சிவசேனை கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்த குணாள் கம்ரா, ஷிண்டேவை துரோகி எனக் கூறினார்.

மேலும், ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் அவரது தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு ’தானேவிலிருந்து ஒரு தலைவர்’ என்ற பாடலை பாடி அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார் குணாள் கம்ரா.

இதனால் கோபமடைந்த சிவசேனை தொண்டர்கள் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினர். அதுமட்டுமின்றி, குணாள் கம்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில் சிவசேனை கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் கனால் உள்பட 11 பேர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் எழுப்பப்பட்ட நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதற்கு பதிலளித்தார்.

அதில், “அரசியல் பதவிகளில் இருப்பவர்களை அவமதித்து, விளம்பரத்திற்காக தொந்தரவு செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. நகைச்சுவை, கேலி போன்றவற்றை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குணாள் கம்ரா இதற்கு முன்பே தரக் குறைவான கருத்துகளைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவர் விளம்பரத்துக்காக சர்ச்சையைக் கிளப்புவதை தனது செயல்பாடாகக் கொண்டுள்ளார். தற்போது துணை முதல்வாரும், சிவசேனை தலைவருமான ஷிண்டேவை அவர் குறிவைத்துள்ளார்.

மகாராஷ்டிர மக்கள் கடந்த 2024 தேர்தலில் யார் சுயமரியாதை உள்ளவர், யார் துரோகி என்பதைக் காட்டினார்கள். மகாராஷ்டிரத்தின் மக்களை விட குணாள் கம்ரா உயர்ந்தவரா?

சிவசேனையின் நிறுவனர் பால் தாக்கரேவின் உண்மையான வாரிசு யார் என்பதை ஷிண்டே நிரூபித்துள்ளார்.

மக்களின் பார்வையில் ஷிண்டேவை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே கம்ராவின் நோக்கம். இப்படியான பேச்சுகளை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் அவருடன் கைகோர்த்துள்ளனரா என்ற சந்தேகம் இருக்கின்றது.

ராகுல் காந்தி கையில் வைத்திருக்கும் சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகத்தை குணாள் கம்ராவும் கையில் வைத்து பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் ஒருவரின் சுதந்திரத்திற்கு கேடு விளைவித்தால், உங்களது சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படும். நீங்கள் (குணால் கம்ரா) யாருடைய சுதந்திரத்திலும் தலையிட முடியாது. இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வெண்டும்” என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com