பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு
பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்தக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்தத் தடை உத்தரவானது பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் பொருள்களுக்கும் அடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பொதுக் கொள்கையின் அடிப்படையில் தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக அல்லது மறைமுக ஏற்றுமதி அல்லது வேறு நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் மற்றும் பாகிஸ்தானிலேயே உற்பத்தி செய்யப்படும் அல்லது பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருள்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விதிவிலக்கு ஏதேனும் தேவைப்பட்டால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே நடைபெற வேண்டும் என்றும் மத்திய அரசின் வணிகத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் நடைபெறும் ஒரே வழித்தடமாக இருந்த அட்டாரி - வாகா எல்லையும் மூடப்பட்டுவிட்டது.
பாகிஸ்தானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் முன்னிலையில் இருப்பது மருந்துப் பொருள்களும், பழங்கள் மற்றும் எண்ணெய் விதைகள்தான்.
இவையும், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா 200 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து கடுமையாக சரிவடைந்தது. தற்போது 2024 - 25ஆம் நிதியாண்டில் இந்திய இறக்குமதியில் 0.0001 சதவீதம்தான் பாகிஸ்தானிலிருந்து மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.