கேரளம்: வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி பலி

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
’வெறிநாய்க்கடியால் உயிரிழந்த நியா. (வலது) செய்தியாளா்களிடம் பேசிய நியாவின் தாயாா் ஹபீரா.’
’வெறிநாய்க்கடியால் உயிரிழந்த நியா. (வலது) செய்தியாளா்களிடம் பேசிய நியாவின் தாயாா் ஹபீரா.’
Published on
Updated on
2 min read

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த நியா ஃபைசல் என்ற 7 வயது சிறுமியை அண்மையில் வெறிநாய் கடித்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஅவிட்டம் திருநாள் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வெறிநாய்க்கடியை குணப்படுத்தும் மருந்துகள் அவருக்கு தரப்பட்டு வந்தன. செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் நியா ஃபைசல் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியான ஜியா ஃபாரிஸ் வெறிநாய்க்கடியால் இறந்த சில தினங் களுக்குப் பிறகு நியா ஃபைசல் உயிரிழந்தார். அச்சிறுமி தவிர மேலும் 6 பேரை அதே வெறிநாய் தாக்கி கடித்ததென்றாலும் ஜியா மட்டுமே தடுப்பூசி பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புல்லாடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் வெறிநாய் கடித்து கடந்த மாதம் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிறுமி நியா ஃபைசலின் தாயார் ஹபீரா செய்தியாளர்களிடம் கூறுகையில் வேறு எந்தக் குழந்தையும் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி உயிரிழக்கக் கூடாது. எங்கள் வீட்டுக்கு அருகே ஏராளமான கழிவுகள் மலைபோல கொட்டப்பட்டுள்ளன.

கழிவுகளைக் கொட்டாதீர்கள் என்று மக்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். எனினும், நாங்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சுழிவுகளால் ஈர்க்கப்பட்ட தெருநாய்கள் என் கண் எதிரிலேயே என் மகளைக் கடித்துக் குதறின. என் மகள் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயும் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அங்கு சிகிச்சை பெற வரும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

மாநில அரசு மீது விமர்சனம்! இந்த விவகாரத்தை முன்வைத்து கேரள அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது தொடர்பாக மாநில எதிர்க்கட்சித் தலைவரான வி டி.சதீசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூன்று முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட குழந்தையான நியா ஃபைசல் வெறிநாய்க்கடிக்கு உயிரிழந்திருப்பது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். ஒரே மாதத்தில் வெறிநாய்க்கடிக்கு மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வெறிநாய்க்கடிக்கு 102 பேர் இறந்தனர். அவர்களில் 20 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதிலும் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கே பொறுப்புள்ளதாக குற்றம்சாட்டினார்.

அவர் இது தொடர்பாக கூறுகையில் 'மாநிலத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின் விதிகளே காரணம். இந்த விதிகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு தயாராக வேண்டும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com