கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொற்கோவில் உள்பட 15 நகரங்கள் மீதான தாக்குதலை முறியடித்தது இந்திய ராணுவம்!

அமிருதசரஸ் பொற்கோவில் மீதான தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

News image

பொற்கோவில்

Updated On :8 மே 2025, 11:52 am

DIN

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோரம் அமைந்துள்ள 15 இந்திய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் உரிய முறையில் முறியடித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட 15 நகரங்கள் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ன.

முன்னதாக, நாடு முழுவதும் நேற்று போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டதுடன், இரவில் பல்வேறு முக்கிய நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இலக்கான நகரங்கள் இருளில் மூழ்கியதும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், அமிருதசரஸ் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கோயில் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. மேலும், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருங்கள். யாரும் அச்சப்பட வேண்டாம். வெளியே ஓரிடத்தில் கூட வேண்டாம். வீட்டில் வெளியே ஒளிரும் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரவில் பாகிஸ்தான் நடத்திய பல்வேறு நகரங்கள் மீதான தாக்குதல் முயற்சிகளில், பொற்கோவிலும் ஒரு இலக்காக இருந்துள்ளது.

நல்வாய்ப்பாக அமிருதசரஸ் பொற்கோவிலை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலை வானில் பல கிலோ மீட்டர் முன்னதாக முறியடித்துள்ளது இந்திய ராணுவம். தொடர்ந்து பொற்கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அமிருதசரஸ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய அரசு கூறுகையில், இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்த முயற்சித்தது. ஆனால், இந்தியா அதனை தடுத்து, அழித்துள்ளது. அதாவது, பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஏராளமான ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்தியா இடைநிறுத்தி தாக்கி அழித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அவந்திபோரா, ஸ்ரீநகர், பதான்கோட், அமிருதசரஸ், குபர்தலா, ஜலந்தர் உள்ளிட்ட 15 இந்திய எல்லையோர நகரங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பயங்கர சப்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அமிருதசரஸ் பொற்கோவிலில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு அரண்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல்நடத்தி அதனை அழித்திருப்பதாகவும், ஆபரேஷன் சிந்தூர் முடிவடைந்துவிடவில்லை, தொடர்வதாகவும் அறிவித்திருந்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.