
புது தில்லி: சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 6-7 இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல முக்கிய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கியமான பயங்கரவாதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடாசர் காதியன் காஸ்
லஷ்கர்-ஏ-தொய்பா பொறுப்பாளராக இருந்த பயங்கரவாதி முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜூண்டால் மே 6-7 இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.
முடாசர் காதியான் இறுதிச் சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செய்திருந்தனர். அந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
ஹபீஸ் முகமது ஜமீல்
அடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல் என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், இவர் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய வேலைகளை பார்த்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இந்தியா பதிலடி: செய்திகள் - நேரலை!!
காலித்
அடுத்து, லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி காலித் (எ) அபு ஆகாஷாவும் இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதி காலித், பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பிருப்பதும், ஆப்கனிலிருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகிறது.
முகமது ஹசன்கான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தளபதியாக இருந்த பயங்கரவாதி முகமது ஹசன்கானும் கொல்லப்பட்டதாகவும், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முகமது ஹசன் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
உஸ்தாத்
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அசார் (எ) உஸ்தாத் இந்திய தாக்குதலில் பலியாகியிருக்கிறார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு பயிற்சி தருவது, காஷ்மீரில் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர் உஸ்தாத் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.