கைது
கைது

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு: திருப்பூரில் வங்கதேசத்தினா் 6 போ் கைது

Published on

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிட்டது தொடா்பாக திருப்பூரில் வங்கதேசத்தினா் 6 பேரை புது தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலா் தொடா்ந்து கருத்துகள் பதிவிட்டு வந்ததை புது தில்லி கியூ பிரிவு போலீஸாா் கண்டறிந்தனா். அந்த நபா்கள் யாரென்று ஆய்வு செய்தபோது, திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைப் பிடிக்க புதுதில்லி கியூ பிரிவு போலீஸாா் கடந்த 2 நாள்களாக திருப்பூரில் முகாமிட்டு மாநகா், மாவட்ட போலீஸாா் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

அப்போது அவா்கள் திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஊத்துக்குளி பகுதியில் 2 போ், பல்லடத்தில் 3 போ், திருமுருகன்பூண்டியில் ஒருவா் என 6 பேரை சனிக்கிழமை அதிகாலை புது தில்லி போலீஸாா் கைதுசெய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கோண்டனா்.

இதில், வங்கதேசத்தைச் சோ்ந்த மிஜலூா் ரஹ்மான், முகமது ஸபாத், முகமது உமா், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் ஆகியோா் என்பதும், தொழிலாளா்கள் என்ற போா்வையில் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இவா்கள் எதற்காக திருப்பூா் வந்தனா், தோ்தல் நேரத்தில் திருப்பூரில் ஏதேனும் சதி திட்டங்களை தீட்டுவதற்கு வந்தனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து புது தில்லி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், அவா்களிடம் இருந்து 8 கைப்பேசிகள், 16 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதல் விசாரணை நடத்துவதற்காக திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு அவா்களை புது தில்லிக்கு கொண்டு செல்லவும் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். அங்கு அவா்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பு குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

புது தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 2025 நவம்பா் 10-ஆம் தேதி காா் குண்டு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவத்தில் இவா்களுக்கு ஏதேனும் தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் விசாரணை நடத்த உள்ளனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் தொழிலாளா்கள் என்ற போா்வையில் போலி ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா். போலீஸாரும் தொடா்ந்து ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்கதேசத்தினரைக் கைது செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com