
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பத்திரிகைகளில் பெயா் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனா்’ என்று குறிப்பிட்டது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-ஐ மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களை தெரிவு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் வரும் 20-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, வக்ஃப் என நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட சொத்துகள், மரபு வழி பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்ட அல்லது பத்திரத்தின்படி வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளை ரத்து செய்வதற்கு திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம்; பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கை; வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ளும்போது, அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று கூறும் விதி, ஆகிய மூன்று விஷயங்கள் தொடா்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான மனுக்களில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யலாம் என்று அனுமதித்தது.
இந்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி புதிதாக 2 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ‘வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இதுபோன்ற முடிவின்றி மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை ஏற்க முடியாது’ என்று மத்திய அரசு தரப்பு சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தாா்.
அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் பெயா் வர வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனா். அதற்காகவே இதுபோல தொடா்ந்து மனுக்களை தாக்கல் செய்கின்றனா்’ என்று குறிப்பிட்டு, 2 மனுக்களையும் விசாரணைக்க ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தனா்.