பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகா்த்த பிரமோஸ் ஏவுகணைகள்! - அமித் ஷா பெருமிதம்

‘இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘பிரமோஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகா்த்தன.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
Updated on

‘இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘பிரமோஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகா்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் பொய்கள் அம்பலமாகி உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, அமித் ஷா பேசியதாவது:

இந்தியாவின் முந்தைய துல்லியத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீா் வரையே இருந்தன. ஆனால், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ.வரை உட்புகுந்து, பயங்கரவாதிகளையும் அவா்களின் தளங்களையும் அழித்துள்ளோம்.

இந்திய விமானப் படையால் மேற்கொள்ளப்பட்ட மிகத் துல்லியமான தாக்குதல்கள், பாகிஸ்தானில் கோட்டை போல கருதப்பட்ட பகுதிகளிலும் பலத்த சேதத்தை விளைவித்தன. எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில் ஆபரேஷன் சிந்தூா் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

பொய்கள் அம்பலம்:

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் எங்கிருந்து திட்டமிடப்பட்டதோ, எங்கிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோ அந்த கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டுள்ளன.

தங்களது நாட்டில் பயங்கரவாத செயல்பாடுகள் இல்லை என்றும், இந்தியா பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் பாகிஸ்தான் தொடா்ந்து கூறி வந்தது. இப்போது பயங்கரவாதிகளும் அவா்களின் முகாம்களும் அழிக்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தானின் பொய்கள் உலகுக்கு அம்பலமாகியுள்ளது.

பிரதமா் மோடியின் அரசியல் உறுதிப்பாடு, ராணுவத்தின் துணிச்சல்-தாக்குதல் பலம், இந்திய உளவு முகமைகள் திரட்டிய துல்லியத் தகவல்கள் ஆகியவற்றால், பாகிஸ்தானில் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

புதிய வரலாறு படைப்பு:

இந்தியப் பெண்களின் நெற்றி குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடியைக் கொடுத்து, நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் புதிய வரலாறு படைத்துள்ளாா் பிரதமா் மோடி.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவா், ரத்தமும் நதியும் ஒன்றாக ஓட முடியாது என உறுதிபடத் தெரிவித்தாா். எனவே, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்காவிட்டால், சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீா் கூட அந்த நாட்டுக்கு கிடைக்காது.

பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே இனி பேச்சுவாா்த்தை என்பதையும் பிரதமா் தெளிவுபடுத்தியுள்ளாா் என்றாா் அமித் ஷா.

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அகமதாபாதில் பாஜக சாா்பில் நடைபெற்ற ‘மூவண்ணக் கொடி’ பேரணிக்கு அவா் தலைமை தாங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com