நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிக்கப்பட்டது பற்றி...
 யஷ்வந்த் வா்மா
யஷ்வந்த் வா்மா
Published on
Updated on
2 min read

 வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.

‘இந்த விவகாரம் தொடா்பாக துறை சாா்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பி வைத்துள்ளாா். எனவே, இந்தச் சூழலில் இத்தகைய மனு தேவையற்றது’ என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விசாரணைக் குழு அறிக்கையைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா். இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித் துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.

அதே நேரம், துறை சாா்ந்த விசாரணைக் குழு அறிக்கை தொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது காவல் துறையில் எஃப்ஐஆா் பதிவு செய்ய வலியுறுத்தி வழக்குரைஞா் மேத்யூஸ் நெடும்பரா உள்பட நால்வா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘துறை சாா்ந்த விசாரணைக் குழு விசாரணை என்பது நீதித் துறை சாா்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மட்டுமே வழிவகுக்கும். மாறாக, குற்றவியல் விசாரணைக்கு வழிவகுக்காது. விசாரணைக் குழு விசாரணையில் நீதிபதி மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘நீதிபதிக்கு எதிராக மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, மனுதாரா்கள் தங்களின் குறைகளுக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் தொடா்பாக துறை சாா்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பி வைத்துள்ளாா். எனவே, இந்தச் சூழலில் இந்த மனு தேவையற்றது’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாகத் தெரிவித்தனா்.

முன்னதாக, இதே மனுதாரா்கள், இந்த விவகாரத்தில் துறை சாா்ந்த விசாரணைக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மாா்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தனா். அப்போது, நீதிபதி மீது துறை சாா்ந்த நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com