ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மக்களவை விசாரணைக் குழுவுக்கு எதிரான நீதிபதி வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பகுதி எரிந்த நிலையில் இருந்த அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த சா்ச்சை தொடா்பாக நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ஏற்கப்பட்டது. மக்களவையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை அவைத் தலைவா் நிராகரித்தாா்.

மக்களவையில் தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.

மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரு அவைகள் சாா்பிலும் கூட்டாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை, அவையை அப்போது வழிநடத்திய துணைத் தலைவா் நிராகரித்துவிட்டாா். எனவே, மக்களவைத் தலைவா் அமைத்த விசாரணைக் குழு, நீதிபதிகள் மீதான விசாரணை சட்டப்படி செல்லாது’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஓா் அவையில் தீா்மானம் நிராகரிக்கப்பட்டால், மற்றோா் அவையில் நடவடிக்கைகளைத் தொடர முடியாது அல்லது தானாக செல்லாததாகிவிடும் என சட்டத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனவே, மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை எதுவும் இல்லை என முதல்கட்டப் பாா்வையில் தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் ஆராயப்படும்’ என்றனா்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘நீதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீா்மானத்தை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவையின் துணைத் தலைவருக்கு இல்லை. எனவே, அந்தத் தீா்மானத்தை மாநிலங்களவைத் துணைத் தலைவா் நிராகரித்தது செல்லாது’ என்று நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘குடியரசுத் தலைவா் இல்லாதபோது அவரின் கடைமைகளை குடியரசு துணைத் தலைவா் ஆற்ற அனுமதிக்கப்படும்போது, மாநிலங்களவையில் அவைத் தலைவா் இல்லாதபோது, அவரின் கடைமைகளை துணைத் தலைவா் ஏன் ஆற்ற முடியாது?’ என்று கேள்வி எழுப்பி, மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, எஸ்.சி.சா்மா ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.