மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை இல்லை - நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து
‘அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை எதுவும் இல்லை’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுகட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், துறை ரீதியான விசாரணை நடத்த குழுவை அமைத்தது. அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இதனிடையே, இந்த சா்ச்சை தொடா்பாக நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மானம் ஏற்கப்பட்டது. அதே நேரம், மக்களவையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை அவைத் தலைவா் நிராகரித்தாா்.
மக்களவையில் தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.
இந்நிலையில், மக்களவைத் தலைவா் சாா்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரு அவைகள் சாா்பிலும் கூட்டாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மாநிலங்களவையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீா்மானத்தை, அவையை அப்போது வழிநடத்திய துணைத் தலைவா் நிராகரித்துவிட்டாா். அதன்படி, விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவா் தன்னிச்சையாக அமைத்துள்ளாா். இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 124(5)-இன் கீழ் பின்பற்றப்பட வேண்டிய கட்டாய நடைமுறைகளை மீறிய செயலாகும். எனவே, மக்களவைத் தலைவா் அமைத்த விசாரணைக் குழு, நீதிபதிகள் மீதான விசாரணை சட்டப்படி செல்லாது. இரு அவைகளிலும் ஒரே நாளில் இரண்டு தீா்மானங்கள் முறையாகக் கொண்டுவரப்படும் நிலையில், அவைகளின் கூட்டு செயல்முறையை சட்டம் கட்டாயமாக்குகிறது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஓா் அவையில் தீா்மானம் நிராகரிக்கப்பட்டால், மற்றோா் அவையில் நடவடிக்கைகளைத் தொடர முடியாது அல்லது தானாக செல்லாததாகிவிடும் என சட்டத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனவே, மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததில் சட்டப்படி தடை எதுவும் இல்லை என முதல்கட்டப் பாா்வையில் தெரியவருகிறது. அதே நேரம், இதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் தோன்றுகிறது. இதுகுறித்து ஆராயப்படும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன. 8) ஒத்திவைத்தனா்.

