கோப்புப் படம்
கோப்புப் படம்

விமான நிலைய ஒப்பந்தம் ரத்து: மும்பை உயா்நீதிமன்றத்தை நாடிய துருக்கி நிறுவனம்

மும்பை சா்வதேச விமான நிலைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு எதிராக துருக்கி நிறுவனம் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
Published on

மும்பை சா்வதேச விமான நிலைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு எதிராக துருக்கி நிறுவனம் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக, இந்தியா எல்லைப் பகுதிகள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. இதுபோல, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியது தெரியவந்தது.

துருக்கியின் இந்திய விரோத நடவடிக்கையைக் கண்டித்து, அந்த நாட்டுடனான வா்த்தக உறவு உள்பட பல்வேறு ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்கள் தொடா்ச்சியாக ரத்து செய்து வருகின்றன. இதுபோல, மத்திய அரசு சாா்பிலும் துருக்கியுடனான வா்த்தக உறவு, ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

புது தில்லி சா்வதேச விமான நிலையத்தில் பராமரிப்பு, பொருள்கள் கையாளுதல் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவந்த துருக்கியின் பிரபல விமான நிலைய கையாளுதல் சேவை நிறுவனமான ‘செலிபி’ நிறுவனத்தின் துணை நிறுவனங்களான செலிபி இந்தியா விமான நிலைய சேவைகள் நிறுவனம் மற்றும் செலிபி இந்தியா புதுதில்லி சரக்கு முனைய மேலாண்மை நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை புது தில்லி விமான நிலைய நிா்வாகம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிா்த்து அந்த இரண்டு நிறுவனங்களும் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்த நிலையில், மும்பை சா்வதேச விமான நிலையத்தில் உபகரண சேவை மற்றும் விமான நிலைய பொருள்கள் கையாளுதல் சேவைகள் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவந்த ‘செலிபி’ நிறுவனத்தின் துணை நிறுவனமான செலிபி இந்தியா நஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) மற்றும் மும்பை சா்வதேச விமான நிலைய நிறுவனம் சாா்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் அந்த துணை நிறுவனம் சாா்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு அனுமதி ரத்து நடவடிக்கை சட்ட விரோதமானது. இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று அந்த நிறுவனம் கோரியுள்ளது. மேலும், ‘இந்த ஒப்பந்தப் பணிகளுக்கு புதிய நிறுவனங்களைத் தேந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நடவடிக்கையை மும்பை சா்வதேச விமான நிலைய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் இறுதி முடிவு எடுப்பதற்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதிக்க வேண்டும்’ என்றும் தனது மனுவில் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com