

உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், மும்பையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி, நவி மும்பை டிஓய் பாட்டில் திடலில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
நவி மும்பையில், மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மும்பையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும், மேற்கு கடற்கரைப் பகுதியான கொன்கன் மற்றும் மும்பை மாவட்டத்தில் நவ. 5 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நவி மும்பையில் இன்று (நவ. 2) மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அப்பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஆட்டம் குறுக்கிடாத வகையில் மழை ஒத்துழைக்க வேண்டும் என்பதே உலகக் கோப்பை கனவை சுமந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் வீராங்கனைகளின் வேண்டுதலாக உள்ளது.
ஏனெனில், இதுவரை இந்திய மகளிர் அணி ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை. பலம் மிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ள இந்திய மகளிர், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டி, ஏனெனில், அவர்களும் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை.
இந்திய அணி கடந்த 2005, 2017-இல் உலகக் கோப்பை இறுதி வரை தகுதி பெற்றிருந்தது. ஆனால், சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைத் தவறவிட்டது.
தற்போது மூன்றாம் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி உள்ளனர். இதற்கு மழை குறிக்கிடாமல் இருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.
இன்று தொடர்ந்து மழை பெய்தால், போட்டி நாளைக்கு (நவ. 3) ஒத்திவைக்கப்படலாம். ஆனால், நா. 5 வரை மழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.