

கடந்த பத்தாண்டுகளில் தலைநகர் தில்லியில் மட்டும் 1.8 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும், இதில் 1.3 லட்சம் பேர் மீட்கப்பட்ட நிலையில், 50 ஆயிரம் குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவரவில்லை.
தில்லி காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, காணாமல் போன 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலை என்ன ஆனது? எங்கே போயினர் என்ற எந்தத் தகவலும் கிடைக்காமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2025 வரை ஒட்டுமொத்தமாக 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1.33 லட்சம் குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 50,771 குழந்தைகளின் நிலை என்ன ஆனது என்று தெரியவரவில்லை என்றும், அதாவது, காணாமல் போகும் மூன்று பேரில் ஒருவரை கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில், 18,063 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். கடந்த 2023ஆம் ஆண்டில் 18,197 பேரும், 2024ஆம் ஆண்டில் 19047 பேரும் காணாமல் போயிருந்தனர். கரோனா காலத்தில் மட்டும்தான் இந்த அளவு 13 ஆயிரம் ஆகக் குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, காணாமல் போன குழந்தைகளின் ஆண் பிள்ளைகளை விட சிறுமிகளும் பெண் குழந்தைகளுமே அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை 98,036 பெண் குந்தைகளும் 86,368 ஆண் பிள்ளைகளும் காணாமல் போயிருப்பதகாவும், இதுவரை 70,696 பெண் பிள்ளைகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 27 ஆயிரம் பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும், தில்லியில் 14,828 குழந்தைகள் காணாமல் போனதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 7,443 பேர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர், ஆனால் 7,385 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதாவத, இந்த ஆண்டு மட்டும், இதுவரை காணாமல் போனதாகக் கூறப்படும் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை மற்றும் விழிப்புணர்வு திட்டங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது, தலைநகர் தில்லிக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க... தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆஜர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.