

தெலங்கானா காங்கிரஸ் அரசில் அண்மையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு (62) சிறுபான்மையினா் நலத் துறை, பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான அறிவிப்பை முதல்வா் ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதுவரை பொது நிறுவனங்கள் துறையை முதல்வா் நேரடியாக கவனித்து வந்தாா். அமைச்சா் அல்லூரி லக்ஷ்மண் குமாா் வசம் சிறுபான்மையினா் நலத் துறை இருந்து வந்தது.
முன்னதாக, கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்றாா். தெலங்கானா சட்டப்பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 18 அமைச்சா்கள் வரை இருக்க முடியும். இப்போது 16 அமைச்சா்கள் உள்ளனா்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற போதிலும் அசாருதீன் தற்போது சட்டப்பேரவை உறுப்பினா் அல்ல. சட்ட மேலவை உறுப்பினராகவும் (எம்எல்சி) இல்லை. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆளுநா் ஒதுக்கீட்டில் அசாருதீனை சட்ட மேலவை உறுப்பினராக்க தெலங்கானா அரசு பரிந்துரைத்தது. ஆனால், நியமனத்துக்கு ஆளுநா் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அசாருதீன் கடந்த 2023-ஆம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவுள்ள அந்தத் தொகுதியில் வரும் 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் காங்கிரஸ் தலைமை அசாருதீனை அமைச்சராக்கியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு அசாருதீன் காங்கிரஸில் இணைந்தாா். அக்கட்சி சாா்பில் மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.