

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரேசில் மாடல் லாரிசா நேரி என்ற பெண் விடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், "இந்தியாவில் என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். என்னை இந்தியராகக் சித்தரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘எச் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஹரியாணாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு பேசினார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய அவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்தியஸ் ஃபெரெரோ என்பவரின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை சுட்டுக்காட்டினார்.
மேலும், அந்த மாடலின் புகைப்படங்களை பயன்படுத்தி, 10 வாக்குச் சாவடிகளில் 22 பெயர்களில் போலியாக வாக்காளர் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பிரேசில் மாடல் மேத்தியஸ் ஃபெரெரோ பேசுபொருளான நிலையில், மேத்தியஸ் ஃபெரெரோ என்பது ஆண் என்றும், அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், ராகுல் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண், விடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தான் பிரேலை சேர்ந்த லாரிசா என்றும், இணையத்தில் பரவி வருவது அவர் சிறுவயதில் மாடலிங் செய்தபோது எடுக்கப்பட்ட படம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
போர்ச்சுகல் மொழியில் பேசி லாரிசா வெளியிட்ட விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
”எனது பழைய புகைப்படம் இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது. அது நான் 18 அல்லது 20 வயதிருக்கும்போது மாடலிங்காக எடுக்கப்பட்டது. புகைப்பட வலைதளங்களில் வாங்கி எனது படத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
எனது புகைப்படத்தை தேர்தலுக்காகவோ, வாக்களிப்பதற்காகவோ பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்கள். இந்தியாவுக்கு நான் சென்றதுகூட கிடையாது. என்னை இந்திய பெண்ணாக காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நான் பணிபுரியும் கடைக்கு அழைத்த ஒரு பத்திரிகையாளர், நேர்க்காணல் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார். மற்றொருவர் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்து, அதன் வழியாக அழைக்கிறார். எனக்கு ’நமஸ்தே’வை தவிர வேறெதுவும் தெரியாது.
எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நாம் எந்த உலகில் வாழ்கிறோம்” எனப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.