

பாகல்பூர், சீமாஞ்சலின் வளர்ச்சியைப் புறக்கணித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி 'பொய்யான வாக்குறுதிகளை' அளித்ததாக காங்கிரஸ் வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.
பிகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாகவும், இந்தமுறை மக்கள் தங்கள் வாக்குகளின் பலத்தால் தக்க பதிலளிப்பார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
பிரதமர் பாகல்பூர், சீமாஞ்சலுக்கு இன்று வருகை தந்துள்ளார். இரட்டை இயந்திர அரசு இந்த இரு பகுதிகளையும் புறக்கணித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடந்த பொய் வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்டவும், சில நேரடி கேள்விகளைக் கேட்கவும் விரும்புகிறோம்.
கடந்த 2015ல் பிரதமர் பாகல்பூரில் விக்ரம்ஷிலா மத்திய பல்கலைக்கு ரூ.500 ஏக்கரில் கட்டுவதாகக் கூறினார். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு செங்கல் கூட எழுப்பப்படவில்லை.
2014ல் மோதிஹாரி சர்க்கரை ஆலை பற்றிக் கூறினார். அடுத்தமுறை நான் வரும்போது, இந்த ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்ட சர்க்கரை கலந்து தேநீர் குடிப்பேன் என்றார். பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் இன்னும் தேநீருக்காக காத்திருக்கிறார்கள்.
2020ல் தர்பங்கா எய்ம்ஸ்க்கு ரூ. 1,264 கோடி ஒதுக்கப்படும் என்றார். இன்று வரை எந்த கட்டடமும், மருத்துவமனையும் கட்டப்படவில்லை. இதற்கிடையில், தர்பங்கா எய்ம்ஸ் 2023இல் செயல்படும் என்றார். இது எப்போது யதார்த்தமாக மாறும்?
சீமாஞ்சல் பகுதியில் வறுமை, துயரம் உச்சத்தில் உள்ளது. அராரியாவின் மக்கள் தொகையில் 52%, பூர்னியாவின் மக்கள் தொகையில் 50%, கிஷன்கஞ்ச்-கதிஹாரின் மக்கள் தொகையில் 45% க்கும் அதிகமானோர், இன்னும் பல பரிமாண வறுமையால் போராடுவதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.
பாஜக-ஜேடியு அரசின் 20 ஆண்டுகளில் சீமாஞ்சல் புறக்கணிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக இங்குள்ள மக்கள் தொகையில் கிட்டத்தட்டப் பாதி பேர் தீவிர வறுமையின் பிடியில் இருப்பதாகவும் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
ஒட்டுமொத்தமாக, சீமாஞ்சலில் கல்வி இல்லை, சுகாதாரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை . வறுமை மற்றும் இடம்பெயர்வு மட்டுமே உள்ளது. பிரதமரின் வளர்ச்சி இங்குத் தொலைவில் கூட தெரியவில்லை.
இந்த முறை சீமாஞ்சல், பாகல்பூர் மக்கள் தங்கள் வாக்குகளின் பலத்தால் என்டிஏவை தோற்கடிப்பதன் மூலம் இந்த புறக்கணிப்புக்குப் பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.