ஜோஹோவுக்கு மாற்றப்பட்ட அரசு அலுவலர்களின் மின்னஞ்சல்கள்! பாதுகாப்பு ஏற்பாடுகளோ அமெரிக்க நிறுவனம் வசம்!!

அரசு ஊழியர்களின் மின்னஞ்சல் தரவு பாதுகாப்பு குறித்து...
Zoho
கோப்புப்படம்ANI
Published on
Updated on
2 min read

பாதுகாப்பு கருதி மத்திய அரசு அலுவலர்களின் 12 லட்சம் மின்னஞ்சல்கள் ஜோஹோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவற்றின் தரவு பாதுகாப்பு, அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் ‘ஜோஹோ’ நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு ஜோஹோ நிறுவன மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் இ-மெயில் கணக்குகளை ஜோஹோ நிறுவனத்திற்கு மத்திய அரசு மாற்றியது. பிரதமரின் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் மின்னஞ்சல்கள், தேசிய தகவல் மையத்திலிருந்து ஜோஹோ தளத்திற்கு மாற்றப்பட்டது.

அதாவது இ-மெயில் முகவரிகள், பாஸ்வேர்டுகள் ஏதும் மாற்றமின்றி அவர்களின் தரவுகளைச் சேமித்து வைக்கும் தளம் மட்டும் ஜோஹோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜோஹோ தளத்திற்கு மாற்றப்பட்ட அரசு இ-மெயில் கணக்குகளின் தரவு பாதுகாப்பு, தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் உள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறை தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில்,

"முதலில் அரசுக்குச் சொந்தமான தேசிய தகவல் மையத்தில் இருந்து 12 லட்சம் அரசு ஊழியர்களின் மின்னஞ்சல், பாஜகவுக்குச் சொந்தமான ஜோஹோவுக்கு மாற்றப்பட்டன.

சிறந்த சேவைக்காகவும் இந்திய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்பட்டதாக அரசு கூறியது.

இப்போது, ​​அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான இஸட்ஸ்கேலர்(ZScaler) நிறுவனத்திடம் அவற்றின் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரகசிய, முக்கியத் தகவல்களைக் கொண்ட அனைத்து மூத்த அரசு அதிகாரிகளின் மின்னஞ்சல்களும் இப்போது கலிபோர்னியா நிறுவனத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

1. இந்திய அரசு ஊழியர்களின் மின்னஞ்சலின் தரவு பாதுகாப்பு ஏன் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது?

2 சரியான பாதுகாப்பு அடுக்கு இல்லையென்றால் முதலில் ஏன் ஜோஹோ தேர்ந்தெடுக்கப்பட்டது? அது பாஜக நிர்வாகிக்குச் சொந்தமான நிறுவனம் என்பதாலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ஜோஹோ தொழில்நுட்ப தயாரிப்பான 'அரட்டை' செயலி பயன்படுத்தும்போது ஏற்படும் பாதுகாப்பு குறைபாடு குறித்து சமூக ஊடகத்தில் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, 'எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சம். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகக் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம். பயனர்களின் தகவல்களை நாங்கள் ஒருபோதும் அணுகுவதில்லை' என்ற கோணத்தில் பதில் அளித்திருந்தார்.

அரட்டை செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Why govt employees emails security under an American company? Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com