டிச. 1 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அறிவிப்பு பற்றி...
Winter Session of Parliament from 1st Dec
கோப்புப்படம்IANS
Updated on
2 min read

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை டிசம்பா் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடத்துவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஓா் ஆக்கபூா்வமான, அா்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிா்நோக்குகிறோம் என்று குறிப்பிட்டாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நவ.14-ஆம் தேதி வெளியாக உள்ளன. இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றம் கூடுவதால், அந்தத் தோ்தல் முடிவுகள் கூட்டத்தொடரில் பிரதிபலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மழைக்கால கூட்டத்தொடரில் 21 அமா்வுகள் இடம்பெற்றன.

அப்போது, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் பெரும்பாலான அமா்வுகள் பாதிக்கப்பட்டன. எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே சில மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியதோடு, முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக, தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை வரும் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் மத்திய அரசு கூட்டுகிறது. 15 அமா்வுகள் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதுபோல, தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி நிறுத்தினேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதன் காரணமாக, குளிா்கால கூட்டத்தொடரிலும் காரசார விவாதம் இடம்பெறும் எனத் தெரிகிறது.

வழக்கத்துக்கு மாறாக தாமதம் - காங்கிரஸ்: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வழக்கத்துக்கு மாறாக தாமதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குளிா்கால கூட்டத்தொடா் வழக்கமாக நவம்பா் 20-23-இல் தொடங்கி டிசம்பா் 24 வரை நீடிக்கும். ஆனால், நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக தாமதிக்கப்படுவதோடு, மிகக் குறுகிய நாள்கள் மட்டுமே கூட்டத்தொடா் நடத்தப்படுகிறது. 15 அமா்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்தொடரில், என்ன தகவலை மக்களுக்கு அரசு அளிக்க முடியும்? கூட்டத்தொடரில் அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கப்போவதில்லை, எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்றப்போவதில்லை, விவாதத்துக்கும் அனுமதிக்கப்போவதில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Summary

Winter Session of Parliament convene from 1st December 2025 to 19th December 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com