

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் வீட்டை ட்ரோன் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள உத்தவ் தாக்கரேவின் வீட்டை ட்ரோன் மூலம் பாஜக அரசு உளவு பார்ப்பதாக அவரின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆதித்ய தாக்கரேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள, மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஆய்வு பணிக்காக மும்பை காவல்துறையினரின் அனுமதி பெற்ற ட்ரோன் பறக்கவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“எங்கள் வீட்டிற்குள் ட்ரோன் எட்டிப் பார்த்த விவகாரம் வெளிவந்ததும், மும்பை காவல்துறை அனுமதியுடன் பாந்த்ரா குர்லா வளாக கணக்கெடுப்புக்காக நடத்தப்பட்டது என்று மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்குள் எட்டிப் பார்த்த ட்ரோன், நாங்கள் பார்த்ததும் அங்கிருந்து மாயமானது என்ன கணக்கெடுப்பு?
காவல்துறை அனுமதி அளித்திருந்தால், கணக்கெடுப்பு தொடர்பாக குடியிருப்பாளர்களுக்கு தகவல் கொடுக்காதது ஏன்?
முழு பாந்த்ரா குர்லா வளாகத்தில் எங்கள் வீட்டை மட்டும் மும்பை வளர்ச்சிக் குழுமம் கண்காணிப்பதா?
மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் களத்தில் இறங்கி, ஊழலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அடல் சேது திட்டம் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ”எங்கள் வீட்டை ட்ரோன் மூலம் உளவு பார்த்தது வெட்கக்கேடான செயல். ஆனால், இதுபோன்று உளவு பார்க்கும் அரசின் கீழ் வசிக்கிறோம் என்ற அதிர்ச்சி எங்களுக்கு ஏற்படவில்லை.
நாங்கள் விடியோ பதிவு செய்யத் தொடங்கும் வரை ஜன்னலுக்கு சமமாகப் பறந்த ட்ரோன், பதிவு செய்வதைக் கண்டதும் மேலே சென்றுவிட்டது.
மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எத்தனை பேரின் வீடுகளைப் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை. பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி விடியோ பதிவுகளை மறுக்கும் நிலையில், ட்ரோன்கள் எங்கள் வீட்டு ஜன்னல்களை எட்டுப் பார்க்கின்றன.
உலகளவில் வேறெந்த அரசு நிறுவனமும், கணக்கீடு என்ற பெயரில் இதுபோன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.