

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் தில்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, ``தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு அதிகாரிகள் உரிய உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடனும் நிலைமை குறித்து கேட்டு வருகிறேன்’’ என்று கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், பல அப்பாவி உயிர்களைப் பறித்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவத்தின் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
தில்லி செங்கோட்டையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், மாலை 7 மணியளவில் சிறிய ரக கார் வெடித்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; மேலும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்தன. சம்பவத்தினைத் தொடர்ந்து, மீட்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவத்தில் காயமடைந்தோரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்து ஆறுதல் கூறினார்.
சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு காவல்படையும் இணைந்துள்ளன.
கார் வெடிப்பைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹரியாணா, ஹைதரபாத், உத்தர பிரதேசம், உத்தரகண்டிலும் பாதுகாப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே, பிகாரில் நாளை பேரவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வெடித்த காரின் எண்ணில் ஹரியாணா எண் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சம்பவம் நடந்த இன்றைய நாளில்தான், தில்லியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஹரியாணாவில் 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் நடந்தது என்ன? ஆணையர் விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.