

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, செங்கோட்டையில் மூன்று நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை அமைப்புகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ நிலையமும் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயங்களுடன் தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக முகமது உமர் என்ற மருத்துவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான தில்லி செங்கோட்டைப் பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்த பரபரப்பான மாலை நேரங்களில், பயங்கரப் பாதிப்புகளை ஏற்படுத்த, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் கொண்டு வெடிவிபத்தை நடத்தியதை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.