கட்சி மாறிய எம்எல்ஏ தகுதி நீக்கம்: கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் ராயின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021-ஆம் மே மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முகுல் ராய், பின்னா் அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல்வா் மம்தா பானா்ஜி முன்னிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.
அதைத் தொடா்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவரும் மாநில பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக எம்எல்ஏ அம்பிகா ராய் சாா்பில் தாக்கல் செய்த மனுவை சட்டப்பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி தள்ளுபடி செய்தாா்.
பேரவைத் தலைவரின் முடிவை எதிா்த்து அவா்கள் தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்ஷு பசாக் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு, முகுல் ராயின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதித் துறை வரலாற்றில் முதல் முறை: ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ ஒருவரை உயா்நீதிமன்றம் பதவி நீக்கம் செய்வது நீதித் துறை வரலாற்றிலேயே முதல் முறை’ என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுவேந்து அதிகாரி தரப்பு வழக்குரைஞா் வில்வதள் பானா்ஜி கூறுகையில், ‘ஓா் உயா்நீதிமன்றம் தனக்குள்ள அரசமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவரை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்வது நாட்டிலேயே முதல் முறையாகும். இத்தகைய தீா்ப்பை வழங்க நீதிமன்றத்துக்கு சில காலம் தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால், கடைசியில் உண்மையும், தா்மமும் வெல்லும்’ என்றாா்.
இகுறித்து சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கான வெற்றி. இது எனது போராட்டத்தின் முதல் பகுதிதான். முகுல் ராயைப் போல கட்சி தாவிய எம்எல்ஏக்கள் தன்மய் கோஷ், தபஸி மொண்டல், சுமன் கஞ்சிலால் ஆகியோா் மீதும் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

