நிதாரி தொடர் கொலை வழக்கிலிருந்து விடுதலை! சிறையிலிருந்து வெளியே வந்த சுரேந்திர கோலி!!

நிதாரி தொடர் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சுரேந்திர கோலி, சிறையிலிருந்து வெளியே வந்தார்.
 சுரேந்திர கோலி
சுரேந்திர கோலிANI
Published on
Updated on
2 min read

புது தில்லி: நிதாரி தொடா்கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திர கோலி, கடைசி வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறைச்சாலையிலிருந்து சுரேந்திர கோலி புதன்கிழமை இரவு 7.20 மணிக்கு வெளியே வந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர்கள் இருந்தனர், குடும்பத்தினர் யாரும் சிறைச்சாலை நுழைவு வாயிலில் இருக்கவில்லை என்றும், வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். சிறையிலிருந்து அவர் எங்கு செல்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை கூறப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, கடைசி வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இவர் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கிரேட்டர் நொய்டா சிறையிலிருந்து நேற்று இரவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிதாரி தொடா் கொலைகள் சம்பவத்தில் தொடா்புடைய கடைசி வழக்கிலும் கீழமை நீதிமன்றங்களால் ஒரே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த சுரேந்திர கோலியை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிரபராதி என்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

நிதாரி கொலைகள் தொடா்புடைய 12 வழக்குகளில் ஏற்கெனவே விடுதலையாகியிருந்த சுரேந்திர கோலிக்கு 13-ஆவது வழக்கிலும் விடுதலை கிடைத்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோலி, நேற்று இரவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுரேந்திர கோலி
சுரேந்திர கோலிANI

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை வழக்கு!

உத்தர பிரதேசம், காஸியாபாத் அருகில் நிதாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறமிருந்த கழிவுநீா் கால்வாயில் 8 சிறுமிகள் உள்பட பல பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இந்தத் தொடா்கொலைகள் நாட்டையே உலுக்கின. அப்போது பாந்தரின் வீட்டில்தான் இந்த சுரேந்திர கோலி வேலை பாா்த்து வந்தாா்.

சிபிஐ விசாரணையில், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தா், சுரேந்திர கோலி கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

தண்டனைகள் படிப்படியாகக் குறைப்பு!

சுரேந்திர கோலியின் கருணை மனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அலாகாபாத் உயா்நீதிமன்றம் 2015-இல் கோலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

பிறகு, குற்றவாளிகளாக இருந்தவர்கள் செய்த மேல்முறையீடுகளில், கடந்த 2023, அக்டோபரில், கோலி (12 வழக்குகள்), சக குற்றஞ்சாட்டப்பட்ட பாந்தா் (2 வழக்குகள்) ஆகிய இருவரையும் அலாகாபாத் உயா்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை எதிா்த்து சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் தள்ளுபடியாகின.

இந்த நிலையில்தான், நிதாரியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட கடைசி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து கோலி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

அதில், விரிவான விசாரணைக்குப் பிறகும், உண்மைக் குற்றவாளியின் அடையாளம் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிறுவப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், தண்டனை வழங்க குற்றவியல் சட்டம் அனுமதிக்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, கொடூரமான வழக்குகளில் கூட, தண்டனையை ரத்து செய்வதே சட்டபூா்வமான வழி என்று கூறியது.

மேலும், சுரேந்திர கோலியை விடுதலை செய்வதற்கான காரணங்களாக, காவல் துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் அலட்சியம் மற்றும் காலதாமதம் உண்மை கண்டறியப்படுவதை பாதித்து, உண்மைக் குற்றவாளியைக் கண்டறியும் வழிகளை அடைத்துவிட்டன. முக்கியமாக, குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை; கைது ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தன; சம்பவ இடம் பாதுகாக்கப்படவில்லை; சோதனைகளில் போதுமான தடயங்கள் கிடைக்கவில்லை. வீட்டுப் பணியாளா்கள், அண்டை வீட்டாா் போன்ற வெளிப்படையான சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை.

இறுதியாக குற்றஞ்சாட்டப்பட்ட கோலியை விடுவிப்பதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் அபராதங்கள் ரத்து செய்யப்படுகின்றன. வேறு வழக்குகளில் தேவைப்படவில்லை என்றால், அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

Surendra Koli, who was acquitted in the Nithari serial murder case, was released from prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com