

வந்தே பாரத், தேஜஸ் போன்ற அதிவிரைவு ரயில்களில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 'உணவு' கட்டாயமாகத் தேர்வு செய்ய வேண்டுமா?
போக்குவரத்துகளில் ரயில் போக்குவரத்து பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது. கட்டணம், பயண நேரம், சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை இதற்கு காரணமாகக் கூறலாம். குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள், ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.
ஆனால், ரயிலில் டிக்கெட்டுகள் கிடைப்பதோ இப்போது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக விழாக் காலங்களில்... தற்போதுகூட பொங்கல் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்குத் தொடங்கிய ஒருசில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. காத்திருப்புப் பட்டியல்கூட இன்றி 'ரெக்ரெட்' (REGRET) நிலைக்குச் சென்றுவிடுகிறது. பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தாலும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெரும்பாலான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள், ஏஜெண்டுகள் வசம் இருக்கின்றன.
இதனிடையே இந்திய ரயில்வேயும், சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் அதாவது அவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கும் நோக்கத்தில் அவ்வப்போது விதிமுறைகளை கடுமையாக்குகிறது. சமீபத்தில்கூட ஆதார் சரிபார்க்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகள் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், முன்பதிவு நேரங்களில் ஏஜெண்டுகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளன. ஆனால், இவற்றால் விளைந்த பயன் பற்றித் தெரியவில்லை.
இந்த நிலையில் குறிப்பிட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 'கட்டணத்துடன் கூடுதல் விலையுள்ள, ஆனால் பலராலும் உண்ண முடியாத' உணவு குறித்து கேட்கப்படும் விருப்பத் தேர்வுகளில் 'உணவு வேண்டாம்' என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கடும் அதிருப்தியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெயர், வயது, பாலினம், படுக்கை வசதி விருப்பம் ஆகியவற்றுடன் 'உணவு தேர்வு' பற்றிய ஆப்ஷன் இருக்கும். நோ புட் என்று தெரிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் உணவுக்கான விலை குறைத்துக் கொள்ளப்பட்டுவிடும்.
ஆனால், திடீரென இந்த இடத்தில் இந்த விருப்பத் தேர்வை - ரயில்களில் 'உணவு வேண்டாம்' (no food) என்ற - ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி கணக்கில் மொத்த பயணிகள் பட்டியலில் (Passengers master list) 'உணவு வேண்டாம்' என்று ஏற்கெனவே தேர்வு செய்திருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகளின் பெயர்களைத் தேர்வு செய்தவுடன் அதிலேயே 'உணவு வேண்டாம்' (no food) எனத் தேர்வாகிவிடும். உணவு தேவைப்பட்டால் அதில் சைவம், அசைவம், ஜெயின் உணவு, நீரிழிவு நோயாளிகளுக்கு சைவம் மற்றும் அசைவம் என இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் தமிழ்நாட்டில் வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகளின் பெயர்களுக்கு அருகில் உள்ள 'உணவுத் தேர்வில்' ஏதேனும் ஒன்றைக் கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. உணவைத் தேர்வு செய்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு ஆகிறது.
உதாரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் ரயிலில் பயணிக்க இப்போது 3 பேருக்கு ரூ. 3,690 ஆகிறது (உணவுடன் சேர்த்து).
அதுவே முன்னதாக 'உணவு வேண்டாம்' என்ற ஆப்ஷனை கொடுத்தபோது 3 பேருக்கு ரூ. 2,850 தான் கட்டணம். 840 ரூபாய் வித்தியாசம். அதாவது ஒருவருக்கு ரூ. 280 கூடுதல் கட்டணம். (இந்தத் தொகைக்கு ஒரு நேர டிபன், ஒரு காபி மற்றும் ஸ்நாக்ஸ்)
அதுவே வந்தே பாரத் ரயிலில் சென்னை - மதுரை இடையே பயணிக்க 3 பேருக்கு உணவுடன் சேர்த்து ரூ. 3,630 ஆகிறது. இதுவே உணவு வேண்டாம் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால் ரூ. 3,270 தான் ஆகும். வித்தியாசம் ரூ. 360. அதாவது ஒருவருக்கு உணவுக்கு செலவு ரூ. 120.
வெறும் 120 ரூபாய்தான் என்றாலும் ஐஆர்சிடிசி வழங்கும் உணவைச் சாப்பிட முடியவில்லை, தரமானதாக இல்லை என்ற காரணத்தினாலேயே பெரும்பாலான பயணிகள் ரயில்களில் உணவு வேண்டாம் என்று தவிர்க்கின்றனர்.
தவிர, ஏற்கெனவே, உணவுத் தரம் குறித்த புகார்கள் அதிகரித்த காரணத்தினாலேயே 2017-ல் 'உணவு வேண்டாம்' என்ற ஆப்ஷனே கொண்டு வரப்பட்டது.
ஐஆர்சிடிசி வழங்கும் உணவு தரமற்றதாக இருப்பதாக நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதாரங்களுடன் பதிவிட்டு வரும் சூழலில் 'உணவு வேண்டாம்' என்ற ஒரு தேர்வு பயணிகளுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.
ஆனால் சமீப நாள்களில் மேற்குறிப்பிட்ட ரயில்களில் உணவு கட்டாயமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்றே ஆப்ஷன் வருவதாக சமூக ஊடகங்களில் புகார்கள் வருகின்றன.
தனி(ஒளி)த்து வைக்கப்பட்டுள்ள 'உணவு வேண்டாம்' ஆப்ஷன்!
ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உணவு குறித்த விருப்பத் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டிக்கெட் முன்பதிவு பக்கத்தில் பெயர் விவரங்களுக்கு கீழே ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண் இருக்கும், அதற்கு கீழே 'I don’t want Food/Beverages' (எனக்கு உணவு/பானங்கள் வேண்டாம்) என ஒரு செக்பாக்ஸ் (checkbox) கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தேர்வு செய்ய (tick) வேண்டும்.
இதைத் தேர்வு செய்துவிட்டால் உங்களுடைய டிக்கெட் கட்டணம் மட்டுமே வரும். நீங்கள் செலுத்தும் தொகையில் உணவுக் கட்டணம் சேராது.
ஆனால், முன்னதாகவே, உணவு ஆப்ஷன் வந்துவிடுவதால் பலரும் இதைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. கீழே வந்து இதை டிக் அடித்துவிட்டால், மேலே பெயர் உள்ளிட்ட விவரங்களுக்கு அருகே உள்ள உணவு ஆப்ஷனில் நீங்கள் எதுவும் தேர்வு செய்யத் தேவையில்லை (என்ன ஒரு புத்திசாலித்தனம்!).
பயணிகளின் இந்தத் துயரம் பற்றி கோரிக்கைகள் ரயில்வே அமைச்சகத்தின் காதில் விழும் வரை, இப்போதைக்கு டிக்கெட் முன்பதிவு பக்கத்துக்குச் சென்றவுடனேயே 'I don’t want Food/Beverages' என ஆப்ஷனை டிக் செய்துவிட்டு பின்னர் மற்ற விவரங்களைக் கொடுப்பது நல்லது.
முன்னதாக 'உணவு வேண்டாம்' என்று பயணிகள் பட்டியலில் (Master list) தேர்வு செய்தாலே முன்பதிவு செய்யும் பக்கத்தில் 'உணவு வேண்டாம்' (no food) என்று வந்துவிடும். இப்போது அப்படி வருவதில்லை.
இப்போது பயணிகளில் பட்டியலில்(Master list) 'உணவு வேண்டாம்' என்று தேர்வு செய்தாலும் டிக்கெட் முன்பதிவு பக்கத்தில் இரண்டு இடங்களில் உணவைத் தேர்வு செய்யும் ஆப்ஷன் வருகிறது. எல்லாம் இரண்டு வேலைகள். சில நிமிஷங்களில் டிக்கெட் முன்பதிவே முடிந்துவிடுகிற நிலையில், இவற்றையெல்லாம் செய்துகொண்டிருந்தால் டிக்கெட் கிடைப்பது உறுதியில்லை. இதனால், பயணிகள் பலருக்கும் குழப்பம்தான் ஏற்படுகிறது.
'உணவு வேண்டாம்' என கீழே ஒரு செக்பாக்ஸ் இருப்பது பற்றிப் பலராலும் அறிய இயலாத நிலையில் இன்னமும் உணவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய ரயில்வேயும் இந்த மாற்றம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த மாற்றம் எப்போது கொண்டு வரப்பட்டது என்றும் தெரியவில்லை. பயணிகளின் குழப்பங்களுக்கும் ரயில்வே இன்னும் பதிலளிக்க முன்வரவில்லை.
ஏற்கெனவே இருந்தது போலவே 'உணவு' தேர்வை மாற்றினால்கூட போதும் என்கின்றனர் பயணிகள். ஒருவேளை 2017க்கு முன்பு இருந்ததுபோல உணவைக் கட்டாயமாக்க ரயில்வே முயற்சிக்கிறதா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாதவாறு ரயில்வே டிக்கெட் முன்பதிவு பக்கத்தில் உணவு தேர்வு ஆப்ஷனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
போகிற போக்கில் ரயில்களில் டிக்கெட் எடுப்பதே பெரிய சாதனையாக மாற்றப்பட்டு விடும் போல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.