

புது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களை அதிகம் கொண்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதை நிலவரங்கள் காட்டுகின்றன.
அதாவது, ஒட்டுமொத்தமாக பிகார் சட்டப்பேரவை 243 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை, முஸ்லிம் மக்களை அதிகம் கொண்ட 16 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமாரின் ஜனதா தளம், எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதாகவும், கடந்த 2020 தேர்தலைக் காட்டிலும், 2025 தேர்தலில், கூடுதலாக இதுபோன்ற 8 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிராக் பாஸ்வானின் எல்ஜேபி முஸ்லிம் வாக்காளர்களை அதிகம் கொண்ட 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றொருபக்கம், ஏற்கனவே தங்களுக்கு சாதகமாக இருக்கும் இதுபோன்ற தொகுதிகளில்கூட, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர பிரசாரம் செய்து, வாக்குகளாக மாற்ற மகாகத்பந்தன் கூட்டணி தவறிவிட்டதாகவும் கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின் மதிய நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், 2020ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த முஸ்லிம்கள் அதிகம் வாழும் 7 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் காங்கிரஸ் நான்கு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் இதுபோன்ற தொகுதிகள் 18லும், காங்கிரஸ் 6லும் வென்றிருந்தது.
வரலாற்றுத் தரவுகளின்படிப்பார்த்தால், முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் மதச்சார்பற்ற கூட்டணியைத்தான் ஆதரித்து வந்திருக்கிறார்கள். தங்கள் சமுதாய மக்களையும், அதுபோன்ற கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்துவார்கள்.
2022 பிகார் ஆய்வில் முஸ்லிம் மக்கள் 17.7 சதவிகிதம் இருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் இவர்களில் 80 சதவிகித வாக்குகளும் 2020 தேர்தலில் 77 சதவிகித வாக்குகளும் மகாகத்பந்தன் கூட்டணிக்கே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த 2025 தேர்தலில், இந்த பகுதிகளில் எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இதையும் படிக்க.. பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.