வ.உ.சி. நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், வழக்குரைஞரும், வணிகரும், தமிழ் அறிஞருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி உயிர்நீத்தார்.

அவரது நினைவு நாளில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் "எக்ஸ்' சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர் "செக்கிழுத்த செம்மல்' வ. உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளில் அவருக்கு என் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். "கப்பலோட்டிய தமிழன்' என்று அன்போடு போற்றப்படும் வ.உ.சி., தென்னிந்தியாவில் சுதேசி தாகத்தைப் பரவச் செய்த மாபெரும் தலைவர். சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ஆங்கிலேயரின் கடல் வணிக ஆதிக்கத்தின் மையத்தையே தகர்த்தெறிய முனைந்தவர்.

தேசத்தின் கொடியை இந்தியக் கப்பல்களில் பறக்கவிட்டு, சுயாட்சி பயணம் தற்சார்பிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை நடத்திக் காட்டியவர். "தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்று பாரதி மனம் நொந்து பாடியபடி, கொடிய காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியதற்காகவும், மக்களிடம் விடுதலைக் கனலை ஏற்படுத்தியதற்காகவும் கடுமையான அடக்குமுறைகளை வ.உ.சி. சந்தித்தார்.

சிறைவாசம், உடல் உழைப்பு தண்டனை போன்ற கொடும் துன்பங்களை அசைக்க முடியாத மனதுடன் எதிர்கொண்டார். அத்தகைய பெருந்தகையின் நினைவு தினத்தில், அவருக்கு என் வணக்கத்தையும் மரியாதையையும் உரித்தாக்குகிறேன். இந்நாளில் அவரின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்து, அவரது லட்சியக் கனலான தற்சார்புடைய வளமான, வலிமையான, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்போம் என்று அந்தப் பதிவில் குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com