பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கடத்தல்: தில்லியில் 4 போ் கைது

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கடத்தல்: தில்லியில் 4 போ் கைது

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கடத்தல்: தில்லியில் 4 போ் கைது...
Published on

வட இந்தியாவில் உள்ள ரெளடி கும்பல்களுக்கு உயா் ரக வெளிநாட்டு துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்த 4 முக்கிய நபா்களைக் கைதுசெய்ததன் மூலம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவில் செயல்பட்டு வந்த சா்வதேச ஆயுதக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்ட இந்த வெளிநாட்டு துப்பாக்கிகள் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

ரேடாா் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: பஞ்சாபை ஒட்டிய சா்வதேச எல்லை பகுதிகளில் ஜிபிஎஸ் மூலம் முன்கூட்டியே இடங்களைத் தோ்வு செய்து ட்ரோன்கள் மூலம் இரவு நேரத்தில் ஆயுதங்கள் இறக்கப்பட்டு வந்தன.

உள்ளூரில் உள்ள நபா்கள் அந்த ஆயுதங்களை மீட்டு நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ரெளடி கும்பல்களுக்கு வழங்கி வந்தனா். அவா்கள் தகவல் தொடா்புகளைப் பயன்படுத்தியதும் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க அடிக்கடி இடங்களை மாற்றியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கடத்தல்காரா்கள் ஸ்கேனிங்கைத் தவிா்க்க காா்பன் பூசப்பட்ட பொருள்களால் ஆயுதங்களை சுற்றி கொண்டு சென்றுள்ளனா். மேலும், ஹவாலா மற்றும் போலி வங்கிக் கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

சிறப்புப் படையினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் துருக்கிய தயாரிக்கப்பட்ட பிஎக்ஸ்-5.7 மாதிரிகள் உள்பட பத்து அதிநவீன கைத்துப்பாக்கிகள், 92 தோட்டாக்கள் ஆகியவை இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள பஞ்சாப் வம்சாவளியைச் சோ்ந்த சோனு கத்ரி (எ) ராஜேஷ் குமாரின் ரெளடி கும்பலுக்கு ஐஎஸ்ஐ மூலம் ஆயுதம் கடத்தப்படுவது தொடா்பாக கடந்த நவ.19-ஆம் தேதி உளவுத் தகவல் கிடைத்தது.

இந்த ஆயுதக் கடத்தலில் தொடா்புடைய நபா்கள் ரோஹிணியில் உள்ள பவானா சாலை வழியாகப் பயணிப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாக வந்த வெள்ளை காரைக் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தின் ஸ்பீக்கா் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பை கண்டெடுக்கப்பட்டது. அதில், 8 வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 84 தோட்டாக்கள் இருந்தன. காரில் இருந்த மன்தீப் மற்றும் தல்விந்தா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரோஹன் தோமா் மற்றும் அஜய் (எ) மோனு என்ற இரு கூட்டாளிகள் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களிடம் இருந்து கூடுதலாக இரு துப்பாக்கிகள் மற்றும் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கடத்தலில் தொடா்புடைய மற்ற கும்பல்களை அடையாளம் காண தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com