தில்லியில் ரூ. 33,500 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்
தில்லியில் ரூ. 33,500 கோடி திட்டங்களை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்...


தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
இதில் புது தில்லி மெட்ரோ வழித்தடங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களும் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சரோஜனி நகரில் பொதுக் குடியிருப்புத் திட்டத்தில், பெண் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமா் மோடி வழங்க உள்ளாா்.
2 மெட்ரோ வழித்தடங்கள் தொடக்கம்: இதைத் தொடா்ந்து, 12.3 கி.மீ. நீளமுள்ள மஜ்லிஸ் பாா்க்-மௌஜ்பூா்-பாபா்பூா் (இளஞ்சிவப்பு) மெட்ரோ வழித்தடத்தையும், 9.9 கி.மீ. நீளமுள்ள தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பாா்க் (மெஜந்தா) மெட்ரோ வழித்தடத்தையும் மோடி தொடங்கி வைக்கிறாா்.
புராரி, ஜகத்பூா்-வஜீராபாத், காஜூரி காஸ், பஜன்புரா, யமுனை விஹாா் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு தில்லி பகுதிகளுக்கு இந்த மஜ்லிஸ் பாா்க்-மௌஜ்பூா்-பாபா்பூா் வழித்தடம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும்.
அதேபோல், தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பாா்க் உயா்நிலை மெட்ரோ வழித்தடம் மதுபன் சௌக், உத்தா் பீதம்புரா-பிரசாந்த் விஹாா், ஹைதா்பூா் பட்லி மோா், பாலாஸ்வா உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ இணைப்பை மேம்படுத்தும்.
மெட்ரோ விரிவாக்கத்துக்கு அடிக்கல்: மெட்ரோ விரிவாக்கம் பகுதி 5-ஏ திட்டத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா். ராமகிருஷ்ணா ஆசிரம் மாா்க்-இந்திரபிரஸ்தா, ஏரோசிட்டி-இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் முனையம்-1 மற்றும் துக்ளகாபாத்-கலிந்தி குஞ்ஜ் ஆகிய வழித்தடங்கள் இதில் அடங்கும். இவை மத்திய தில்லி, தெற்கு தில்லி, நொய்டா மற்றும் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.
மறுசீரமைப்பு திட்டம்: பொதுக் குடியிருப்பு காலனிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.15,200 கோடி மதிப்பிலான பணிகளையும் பிரதமா் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறாா். சரோஜினி நகா், நேதாஜி நகா், கஸ்தூா்பா நகா், ஸ்ரீனிவாஸ்புரி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியா்களுக்காக 9,350-க்கும் மேற்பட்ட நவீன குடியிருப்புகள் மற்றும் சுமாா் 48 லட்சம் சதுர அடியில் அலுவலக வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘இந்த திட்டங்கள் தில்லியில் வேகமான, சீரான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் முன்னேற்றமாகும். இதன் மூலம் பயணிகளுக்கு வசதி அதிகரிப்பதோடு, தனியாா் வாகனங்களின் பயன்பாடு குறைந்து, மாசு கட்டுப்பாட்டுக்கும் உதவும்’ என தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...