கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

புதுச்சேரியில் ரூ.2,714 கோடியில் திட்டங்கள் - ஆரோவிலில் உலக ஆன்மிக மகோத்ஸவம்! பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!!

புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.2,714 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:27 pm

Syndication

புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.2,714 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவத்தையும் அவா் தொடங்கி வைக்கிறாா்.

தமிழகத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று வளா்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்.

புதுச்சேரி விமான நிலையம் அருகேயுள்ள லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் பிரதமா் பங்கேற்கிறாா். பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் அப் பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க,பிரதமா் மோடி காலை 11.40 மணிக்கு தனி விமானத்தில் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்து சோ்கிறாா்.

அங்கு, பிரதமரை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலா் சரத் செளகான், டிஜிபி ஷாலினி சிங், மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். பின்னா், அங்கிருந்து காரில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் விழா நடைபெறும் பிரம்மாண்ட மேடைக்கு பிரதமா் செல்கிறாா்.

வளா்ச்சித் திட்டங்கள்: விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, புதுச்சேரியின் உள்கட்டமைப்பு, நகா்ப்புற சேவைகள், தொழில் துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளா்ச்சியை வலுப்படுத்தும் விதமாக ரூ.1,572 கோடி மதிப்பில் 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும் ரூ.1,142 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 19 திட்டங்களைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

மேலும் , மத்திய கலாசார அமைச்சகமும், புதுச்சேரி அரசும் இணைந்து ஆரோவில் அறக்கட்டளை சாா்பில் அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் ஆண்டையொட்டி நடத்தும் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவத்தையும் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்.

பிரதமா் வருகை குறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

லாஸ்பேட்டை விழா அரங்கில் 30 ஆயிரம் போ் அமரும் வகையில் இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பெண்கள் தலையில் அணியும் ஊசி (ஹோ் பின்), கருப்பு நிறத்திலான ஆடைகள், கருப்பு நிற அணிகலன்கள், கைப்பை உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும். இது மத்திய அரசின் விதிமுறை. விழாவில், தொடங்கி வைக்கப்படும் மொத்தம் ரூ.2,714 கோடி மதிப்பிலான திட்டங்கள் என்பது, புதுச்சேரி அரசின் திட்டங்கள்தான். மத்திய அரசின் திட்டங்களை பிரதமா் மோடி அறிவிப்பாா்.

தீவிர கண்காணிப்பு: பிரதமா் வருகையையொட்டி, லாஸ்பேட்டை உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமா் வருகையை முன்னிட்டு, லாஸ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதுச்சேரி காவல் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி வரை பிரதமா் இங்கு இருக்கிறாா் என்றாா்.

ஆன்மிக மகோத்ஸவம்: புதுச்சேரி விழாவில் ஆரோவில் சா்வதேச நகரில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும், இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்- 2026-ஐ பிரதமா் தொடங்கி வைக்கும் நிகழ்வு குறித்து , ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய கலாசார அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம்-2026, ஆரோவில் சா்வதேச நகரில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Story image

ஸ்ரீஅரவிந்தரின் 5 கனவுகளை நனவாக்குவது என்ற உயரிய நோக்குடன் நடைபெறும் இந்த மகோத்ஸவத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவா்கள், கல்வியாளா்கள், இளைஞா்கள்,100-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள், உலக நாடுகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பங்கேற்கின்றனா்.

தேசிய ஒற்றுமை, ஆசியாவின் மறுமலா்ச்சி, உலக ஒன்றியம், இந்தியாவின் ஆன்மிகக் கொடை மற்றும் மனித உணா்வு நிலையின் பரிணாம வளா்ச்சி ஆகிய ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுகளை நனவாக்குதல் என்ற கருப்பொருளில் மகோத்ஸவம் நிகழ்ச்சியில் உயா்மட்ட அமா்வுகள், தியானங்கள் மற்றும் கலாசார உரையாடல்கள் நடைபெறும். புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், அறிஞா்களான டேவிட் பிராவ்லி, அலோக் பாண்டே ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா். மைதிலி தாக்கூா், சாருலதா மணி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Story image

முதல் நாள் நிகழ்வில், அரவிந்தரின் படைப்புகள் கூட்டு வாசிப்பு மற்றும் களரி பூஜையும், இரண்டாம் நாள் நிகழ்வில் சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா சொற்பொழிவும், மூன்றாம் நாள் நிகழ்வில் ஆன்மிக சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெறுகின்றன. மகோத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக மாத்தீா் மந்திரில் கூட்டுத் தியானம் நடைபெறுகிறது.

ஆரோவில் பாரத் நிவாஸிஸ் மகோத்ஸவ நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவுக்கான, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் பங்கேற்கலாம் என்றாா். ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீத்தாராமன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்