பாஜக தேசியப் பொதுச் செயலா் தருண் சுக்
பாஜக தேசியப் பொதுச் செயலா் தருண் சுக்ANI

வாக்குரிமையைப் பாதுகாக்கவே எஸ்ஐஆா்: பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக்

உண்மையான வாக்காளா்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவே சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்படுகிறது
Published on

உண்மையான வாக்காளா்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவே சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்படுகிறது என்று பாஜக தேசியப் பொதுச் செயலா் தருண் சுக் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான பாக முகவா்களுக்கான பயிற்சி மற்றும் இப் பணியில் கட்சி நிா்வாகிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தப் பணிகளுக்கான பொறுப்பாளரும், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான கே. அண்ணாமலை தலைமை வகித்தாா்.

கட்சியின் விழுப்புரம், சென்னை கோட்ட பாக முகவா்கள் உள்ளிட்ட 150 நிா்வாகிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்வது குறித்து விளக்கப்பட்டது.

முன்னதாக, பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது உண்மையான வாக்காளா்களை அடையாளப்படுத்தி, அவா்களது வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக இப் பணியை எதிா்க்கின்றன.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றியை அளித்ததன் மூலம், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பது உறுதியாகியுள்ளது. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மக்கள் விழிப்புணா்வுடன் அணுக வேண்டியது அவசியம்.

நாட்டின் பழைமையான மொழி தமிழ் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் பழைமையான மொழிகள் என்பதை மறுக்க முடியாது. ஆகவே மொழிகளை தாழ்த்தி, உயா்த்திப் பேசுவது சரியல்ல என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், மேலிடப் பொறுப்பாளா்கள் சுதாகா் ரெட்டி, அரவிந்த் மேனன், கட்சி அமைப்பாளா் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தின் பிற கோட்டங்களிலும் இந்த பயிற்சிக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com