தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

அரசமைப்புச் சட்ட தின விழாவில் குடியரசுத் தலைவரின் உரை...
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Updated on
1 min read

காலனித்துவ மனப்பான்மையை ஒழித்து, தேசியவாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள வழிகாட்டும் ஆவணமாக அரசியலமைப்புச் சட்டம் இருப்பதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. சம்விதான் சதன் என்னும் அரசமைப்பு வளாகத்தில் (நாடாளுமன்ற பழைய கட்டடம்) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், 9 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை வெளியிட்ட குடியரசுத் தலைவா், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்தார்.

பின்னர், அவையில் குடியரசுத் தலைவர் பேசியதாவது:

“நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், நமது தனிப்பட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். காலனித்துவ மனப்பான்மையை ஒழித்து, தேசியவாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள வழிகாட்டும் ஆவணமாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.

25 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து மீட்டெடுத்தது நாட்டின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். பெண்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், நடுத்தர வர்க்கம் ஆகியோர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.

முத்தலாக் எனும் சமூகத் தீமையை ஒழித்து, நமது சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நீதி வழங்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை நமது நாடாளுமன்றம் எடுத்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நமது நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டது.

370-வது பிரிவை நீக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்கு இடையூறாக இருந்த தடையை அகற்றியது. இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி முதல், நமது தேசிய கீதமான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டதன் 150 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் நாடு தழுவிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் மற்றும் இரு அவைகளின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனர்.

Summary

The Constitution guides us to embrace nationalist thinking! President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com