மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
நாட்டின் அரசமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. சம்விதான் சதன் என்னும் அரசமைப்பு வளாகத்தில் (நாடாளுமன்ற பழைய கட்டடம்) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் மற்றும் இரு அவைகளின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மத்திய சட்டமியற்றுதல் துறையால் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அஸ்ஸாமி ஆகிய 9 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை வெளியிட்ட குடியரசுத் தலைவா், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்தார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் கடந்த 1949, நவ. 26-இல் ஏற்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் அன்றைய தினமே அமலுக்கு வந்தன. பெரும்பாலான பிற பிரிவுகள், இந்தியா குடியரசான 1950, ஜனவரி 26-இல் அமலாகின.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினம், அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு அரசமைப்புச் சட்ட தினம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 76-ஆவது ஆண்டைக் குறிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.