மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்X | Piyush Goyal

50 நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: பியூஷ் கோயல்

50 நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி, நவ.28: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்பட 50 நாடுகளுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தப் (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தில் பியூஷ் கோயல் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: தற்காலத்தில் வா்த்தகத்தை ஆயுதம்போல் சில நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்தச் சூழலில் நம்பிக்கையான கூட்டாளிகளின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்.

அந்த வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா தொடா்ந்து முயற்சித்து வருகிறது.

அதன்படி பஹ்ரைன், கத்தாா், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 6 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உடன் பலகட்ட நிலைகளில் எஃப்டிஏ பேச்சுவாா்த்தை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஏற்கெனவே எஃப்டிஏ கையொப்பமான நிலையில், ஓமனுடன் ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பஹ்ரைன் மற்றும் கத்தாா் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த முனைப்புக்காட்டி வருகிறது.

இதுதவிர அமெரிக்கா, நியூசிலாந்து, 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் மற்றும் 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பு, கொரியா, இஸ்ரேல், கனடா என மொத்தம் 50 நாடுகளுடன் எஃப்டிஏ பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கனடாவுடன் அடுத்த வாரம் இந்த ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் எஸ்வாட்டினி ஆகிய 5 உறுப்பு நாடுகளைக் கொண்ட தென் ஆப்பிரிக்க சுங்க யூனியன் (எஸ்ஏசியு) மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே, பராகுவே உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட மொ்கோசா் அமைப்பும் இந்தியாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்த ஆா்வம் காட்டி வருகின்றன.

இதுதவிர பெலாரஸ், ரஷியா, ஆா்மீனியா, கஜகஸ்தான் மற்றும் கிா்கிஸ்தான் ஆகிய 5 உறுப்பினா்களைக் கொண்ட ஐரோப்பிய ஆசிய பொருளாதார யூனியனுடன் (இஏஇயு) அண்மையில் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது என்றாா்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ், பிரிட்டன், நான்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பான இஎஃப்டிஏ உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா எஃப்டிஏ மேற்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com