
இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான பிரம்மானந்தம், கர்ரி நுக்காராஜூ, சிந்தா நாகேஸ்வர ராவ் மற்றும் கொப்படி ஸ்ரீனு ஆகியோர், கடந்த 53 நாள்களுக்கு முன்பு படகு வாங்குவதற்காக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு படகு வாங்கிய பின்பு, அந்தப் புதிய படகிலேயே காக்கிநாடாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, வழி தவறி இலங்கை கடற்பகுதியினுள் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் 4 பேரும் கஞ்சா கடத்தல்காரர்கள் எனச் சந்தேகித்த இலங்கை அதிகாரிகள் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காக்கிநாடா மக்களவை உறுப்பினர் உதய் ஸ்ரீனிவாஸ், எம்.எல்.ஏ. வனமடி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் ஆந்திர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களது படகுடன் மீனவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மீனவர்களையும் அவர்களது படகையும், இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று (செப். 30) காக்கிநாடா அழைத்து வந்தனர்.
இதுபற்றி, காக்கிநாடா மக்களவை உறுப்பினர் உதய் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், இந்திய மீனவர்களை படகுடன் இலங்கை அரசு விடுவித்துள்ளது இதுவே முதல்முறை எனவும், இதற்கு முன்பு அவர்கள் சிறைப்பிடிக்கும் மீனவர்களை மட்டுமே விடுவிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.