
நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஹிந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் தில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு இன்று (அக். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது,
''ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவான 1925 முதல் தற்போது வரை நாட்டிற்கான சேவையை அர்ப்பணிப்புடன் அதன் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். தியாகம், ஒழுக்கம், தன்னலமற்ற சேவையில் நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிறந்த உதாரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உள்ளது.
இந்த மாபெரும் இயக்கத்தில் தற்போதுள்ள உறுப்பினர்கள் நூற்றாண்டு விழாவைக் காணும் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பணிபுரிந்து வருகிறது. நாட்டின் நலனுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் எந்தவித சமரசமும் செய்துகொண்டது கிடையாது. சுதந்திரப் போராட்டத்தின்போதும் நாட்டு மக்களுக்கு அரணாக இந்த இயக்கம் செயல்பட்டது. இதற்காக இந்த இயக்கத்தை தோற்றுவித்த கே.பி. ஹெட்கேவர் உள்பட உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு நிஜாம்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. கோவா, தாத்ரா, நாகர் ஹவேலி சுதந்திரத்தின்போது இந்த இயக்கம் பல தியாகங்களை செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு வகையில் இடையூறுகள் இருந்தன. தொடர்ந்து தடைகளையும் சதிச்செயல்களையும் சந்தித்ததே தவிர, யாருக்கு எதிராகவும் கசப்பான செயல்களில் ஆர்வம் காட்டியதில்லை'' என பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.