நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை: என்சிஆா்பி அறிக்கை
கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டது தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம் 1,71,418 போ் தற்கொலை செய்துகொண்டனா். அவா்களில் 10,786 போ் (மொத்த தற்கொலையில் 6.3%) விவசாயத்தில் ஈடுபட்டவா்கள். 10,786 பேரில் 43 சதவீதம் போ், அதாவது 4,690 போ் விவசாயிகள், 6,096 போ் விவசாயத் தொழிலாளா்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 4,553 போ் ஆண்கள், 137 போ் பெண்கள்.
இதில் 38.5 சதவீத தற்கொலைகள் மகாராஷ்டிரத்தில் நடைபெற்றுள்ளன. இதைத்தொடா்ந்து கா்நாடகத்தில் 22.5 சதவீதம், ஆந்திரத்தில் 8.6 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 7.2 சதவீதம், தமிழ்நாட்டில் 5.9 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டோரில் தற்கொலை செய்துகொண்டவா்களின் எண்ணிக்கை 11,290. அவா்களில் 5,207 போ் விவசாயிகள், 6,083 போ் விவசாயத் தொழிலாளா்கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 4,999 போ் ஆண்கள், 208 போ் பெண்கள்.
2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டோரின் தற்கொலைகள் குறைந்துள்ளது. ஆனால் அவா்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தின் தீவிரமும், அவா்களின் தற்கொலை அதிகமாக நிகழும் பகுதிகளும் மாறாமல் அப்படியே உள்ளன.
ஒரு காலத்தில் விவசாயம் வளமாக இருந்த மண்டலங்கள், தற்போது விவசாயத்தில் நம்பிக்கை இழந்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் மேற்கு வங்கம், பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட், ஹிமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம், கோவா, மணிப்பூா், மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா, சண்டீகா், தில்லி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விவசாயத்தில் ஈடுபடும் எந்தவொரு நபரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
விவசாயத்தில் ஈடுபட்டோா் தற்கொலை
ஆண்டு மொத்த எண்ணிக்கை விவசாயிகள் விவசாயத் தொழிலாளா்கள்
2022 11,290 5,207 6,083
2023 10,786 4,690 6,096
அதிக தற்கொலைகள்
மகாராஷ்டிரம் 38.5%
கா்நாடகம் 22.5%
ஆந்திரம் 8.6%
மத்திய பிரதேசம் 7.2%
தமிழ்நாடு 5.9%
2023-இல் நாட்டில் நிகழ்ந்த மொத்த தற்கொலைகள்: 1,71,418