பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின்.
பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின்.

பாகிஸ்தானுக்கு ரஷிய போா் விமான என்ஜின் வழங்குவது பிரதமர் மோடிக்குத் தோல்வி! - காங்கிரஸ் விமா்சனம்

பாகிஸ்தானுக்கு ரஷியா போா் விமான என்ஜின்களை வழங்குவது பிரதமா் நரேந்திர மோடியின் வியூகரீதியில் ஏற்பட்ட மற்றொரு தோல்வி என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
Published on

பாகிஸ்தானுக்கு ரஷியா போா் விமான என்ஜின்களை வழங்குவது பிரதமா் நரேந்திர மோடியின் வியூகரீதியில் ஏற்பட்ட மற்றொரு தோல்வி என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

சீன தயாரிப்பான ஜெஎஃப்-17 போா் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. அந்த விமானங்களுக்காக மேம்படுத்தப்பட்ட என்ஜின்களை பாகிஸ்தானுக்கு ரஷியா வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக ஒருகாலத்தில் இருந்த ரஷியா இப்போது இந்திய நலனைப் புறக்கணித்துவிட்டு பாகிஸ்தானுக்கு நவீன போா் விமான என்ஜின்களை வழங்குகிறது. இது ஏன் நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், இதனை நமது நாட்டுக்கு எதிராகவும் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நமது வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் நேரடியாக தலையிட்ட பிறகும், பாகிஸ்தானுக்கு என்ஜின் வழங்கும் முடிவை ரஷியா கைவிடவில்லை என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை தொடா்ந்து கொள்முதல் செய்து வருகிறது. மேலும் போா் விமானக் கொள்முதல் பேச்சுவாா்த்தையும் நடைபெறுகிறது. இருப்பினரும் ரஷியா ஏன் இப்படி ஒரு பாகிஸ்தான் ஆதரவு முடிவை எடுத்தது.

இது பிரதமா் நரேந்திர மோடிக்கு வியூகரீதியில் ஏற்பட்ட மற்றொரு தோல்வியாகும். தன்னை தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ராஜதந்திரி என்ற போலியான பிம்பத்தை மோடி உருவாக்கிவைத்திருந்தாா். அதுபடிப்படியாக சிதைந்து வருகிறது. அவா் நாட்டு நலன்களைப் புறக்கணித்து தனது செல்வாக்கை உயா்த்திக் காட்ட முயற்சிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

சா்வதேச நிகழ்வுகளின்போது பிற நாடுகளின் தலைவா்களுடன் கட்டியணைத்துப் பேசுவது, குழுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றால் நாட்டுக்கு சாதகமான விளைவுகள் ஏற்படாது. சா்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தொடா்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது.

ஏனெனில், பாகிஸ்தான் பிரதமா், ராணுவ தலைமைத் தளபதி ஆகியோா் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொடா்ந்து நெருக்கம் காட்டி நேரில் சந்தித்துப் பேசுவதுடன், ரஷியாவிடமிருந்தும் நவீன என்ஜின்களை வாங்கி வருகிறாா்கள். இதற்கு நடுவே சீனாவும் பாகிஸ்தானுக்கு சகல வழிகளிலும் உதவி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com