
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கோப்பை வழங்காத பாகிஸ்தான் அமைச்சர் மோஹ்சின் நக்விக்கு அந்நாட்டு அரசு தங்கப் பதக்கம் வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டின் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்தனர்.
இருப்பினும், பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி, அந்நாட்டினருடன் கைகுலுக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், தொடரில் இந்தியா வெற்றியும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தொடரில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்க முன்வந்தார். ஆனால், அவரின் கைகளிலிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்தது.
இதனையடுத்து, மீண்டுமொரு நிகழ்ச்சியில் தனது கைகளால்தான் கோப்பையை வழங்குவேன் என்றுகூறிய நக்வி, கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார். கோப்பை, தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால், மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்துக்கு ஆசியக் கோப்பையை கொண்டுவருவதில் தாமதம் நீடிக்கிறது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்காக நக்விக்கு பாகிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கராச்சியில் ஒரு விருந்து விழாவில் நக்விக்கு பதக்கம் வழங்கப்படும் என்று சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா? ரவீந்திர ஜடேஜா கொடுத்த தரமான பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.