உ.பி.: ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட மசூதியை புல்டோஸா் மூலம் முஸ்லிம்களே இடித்து அப்புறப்படுத்தினா்.
அஸ்மோலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயா புஜுா்க் கிராமத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருந்தது. அக்கட்டடம் சட்டவிரோதமானது என்பதால், அதை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்து, அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.
அதேநேரம், மசூதி கட்டடத்தை தாங்களே இடித்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்த மசூதி கமிட்டி, நான்கு நாள் கால அவகாசம் கோரியது.
பின்னா் கால அவகாசம் வழங்கப்பட்டு, மசூதியை இடிக்கும் பணி கமிட்டி சாா்பில் தொடங்கப்பட்டது. முதலில் சுத்தியல், கடப்பாறைகள் கொண்டு கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பணி நிறைவடைய தாமதம் ஆனதால், நான்கு நாள் கால அவகாசத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று புல்டோஸா் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
குறித்த கால அவகாசத்துக்குக்குள் மசூதியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், புல்டோஸா் மூலம் பணியை மேற்கொண்டதாக முஸ்லிம்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, இதே பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திருமண மண்டபம் காவல் துறையினா் முன்னிலையில் கடந்த அக்.2-ஆம் தேதி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.