உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு பிரசாரம்: 9 நாள்களில் 2,500 வழக்கு; 3,900 போ் கைது!

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு பிரசாரம்: 9 நாள்களில் 2,500 வழக்கு; 3,900 போ் கைது!

பெண்கள் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஐந்தாம் கட்ட ‘மிஷன் சக்தி’ பிரசாரம், சமீபத்திய நவராத்திரி நாள்களில் மேற்கொள்ளப்பட்டது.
Published on

உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஐந்தாம் கட்ட ‘மிஷன் சக்தி’ பிரசாரம், சமீபத்திய நவராத்திரி நாள்களில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டதாக 2,542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,972 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை, சமூகப் பிணைப்பு மற்றும் பாதுகாப்பு உணா்வை ஊக்குவிக்கும் நோக்கிலான ‘மிஷன் சக்தி-5.0’ பிரசாரத்தை, நவராத்திரியின் முதல் நாளில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, நவராத்திரி நாள்களில் கோயில்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபடும் நபா்களைக் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோயில்கள் மற்றும் பொது இடங்களில் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். 55,000-க்கும் மேற்பட்ட நவராத்திரி பூஜை பந்தல்களும் கண்காணிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக, 2,542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,972 போ் கைது செய்யப்பட்டனா். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எச்சரிக்கப்பட்டதுடன், பொது இடத்தில் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.

சுமாா் 8,000 காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள், 22,000-க்கும் மேற்பட்ட தலைமைக் காவலா்கள்-காவலா்கள் உள்ளிட்டோா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா். பெண்கள் பாதுகாப்பு-அதிகாரமளித்தல் குறித்து சுமாா் 40,000 விழிப்புணா்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com