
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற விவகாரத்தில் வழக்குரைஞர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
தலைமை நீதிபதி மீது நடத்தப்படும் தாக்குதல் அரசியலமைப்பின் மீதும் ஜனநாயக மதிப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மத்தியப் பிரதேச மாநிலம் கஜூராஹோ கோவிலில் கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை சரி செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துடன் முரண்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி அவரைத் தாக்க முற்பட்டுள்ளார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு வழக்குரைஞரை தடுத்து நிறுத்தி, அவரை கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது, ''மனுஸ்மிருதி, சனாதனம் ஆகிய பெயரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முற்படுவது வருந்தத்தக்க செயல்.
இந்திய தலைமை நீதிபதியை அவமதித்ததை நான் கண்டிக்கிறேன். தலைமை நீதிபதி மீது காலணியை வீசும் மனநிலையில் ஒரு வழக்குரைஞர் இருந்தால், அவர் அந்த இடத்தில் மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணியிடை நீக்கமும் செய்யப்பட வேண்டும்.
மனுஸ்மிருதி மற்றும் சனாதன தர்மத்தின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறார்கள்; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.