

கர்நாடகத்திலிருந்து செமி கண்டக்டர் முதலீடுகள் அஸ்ஸாம் மாநிலத்துக்கு திருப்பி விடப்பட்டதாக எழுந்த பிரச்னையில் கர்நாடக காங்கிரஸுக்கும் அஸ்ஸாம் பாஜகவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்துக்கான செமி கண்டக்டர்கள் முதலீடு, அஸ்ஸாம் மற்றும் குஜராத்துக்கு திருப்பிவிடப்பட்டதாக மத்திய அரசு மீது கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பிரியங் கார்கேவை முதல்தர முட்டாள் என்று விமர்சித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அஸ்ஸாம் இளைஞர்களை பிரியங் கார்கே அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், கார்கே மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து பரிசீலிப்பதாகவும், கார்கேவின் கருத்துகளை காங்கிரஸ் கண்டிக்கவில்லை என்றும் கூறினார்.
சர்மாவின் பேச்சைத் தொடர்ந்து, தனது தோல்விகளை மறைக்க அவர் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய கார்கே, ``இளைஞர்கள் ஏன் வடகிழக்கு மாநிலத்தை விட்டுவிட்டு வேறு இடங்களில் வேலை தேடுகின்றனர்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
கார்கே மேலும் கூறுகையில், ``கர்நாடகத்தில் பொறியியல் திறமை, சுற்றுச்சூழல் அமைப்பு நன்றாக இருந்தும்கூட, குஜராத் மற்றும் அஸ்ஸாமில் செமி கண்டக்டர் நிறுவனங்களை அமைக்க எப்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய என்னுடைய அறிக்கை தெளிவானது. சர்மாவின் சொந்த செல்வம் மட்டுமே வளர்கிறது. ஆனால், அஸ்ஸாமின் இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, கார்கேவின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த அஸ்ஸாம் பாஜக, ``ஹலோ டெடி பாய், உங்களின் நீண்ட கட்டுரையால், உங்களை செமி கண்டக்டர் நிபுணராக ஆக்க முடியாது.
அஸ்ஸாம் பற்றிய சொற்பொழிவுக்குப் பதிலாக, உங்களின் சொந்த கொல்லைப் புறத்தைப் பாருங்கள். உங்கள் மாவட்டம்தான், தென்னிந்தியாவில் வறுமையில் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது’’ என்று விமர்சித்துள்ளது.
இதையும் படிக்க: தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.