

மோந்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தீவிரப் புயலாக மாறியுள்ள மோந்தா புயல், இன்று (அக். 28) வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயலானது இன்று மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், வட தமிழகம், ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோந்தா புயலின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மல்கங்கிரி, கோராபுட், ராயகடா, கஞ்சம், கஜபதி, கந்தமால், கலஹண்டி மற்றும் நபரங்பூர் ஆகிய 8 மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதுபற்றி, ஒடிசாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறியதாவது:
“மோந்தா புயலின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படை ஆகிய படைகளின் 140 குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.
தெற்கு ஒடிசாவில், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 1,445 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 32,528 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டு வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: காக்கிநாடா துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! இதன் அர்த்தம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.