

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல், இன்று மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயம் என்பதைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதிக்கு அருகே இன்று நள்ளிரவில் கரையைக் கடந்து, புதன்கிழமை மாலைக்குப் பிறகுதான் வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பிற துறைமுகங்களில் அதாவது விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் பலத்த அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டுகளில் ஒன்று மற்றும் இரண்டு புயல் சின்னம் உருவாவதையும், 3 மற்றும் 4 கூண்டுகள் மோசமான வானிலையையும் 5, 6, 7 கூண்டுகள் அபாயம் இருப்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
ஆனால், எட்டு முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் மிகுந்த அபாயம் இருப்பதைக் காட்டும். இந்த எண்களுங்கான புயல் எச்சரிக்கை கூண்டுகளில் கூம்பு வடிவம் கீழ்நோக்கி இருந்தால், புயல் சின்னம் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்றும், கூம்பு வடிவம் மேல் நோக்கி இருந்தால் வலது பக்கத்தில் கரையைக் கடக்கும் என்றும், உருளைக்கு மேலே இரண்டு கூம்பு வடிவங்கள் இணைக்கப்பட்டிருந்தால் துறைமுகத்தின் இரண்டு பக்கங்களிலும் புயல் கரையைடக் கடக்கும் என்றும் உருளை உருளை வடிவம் இன்றி வெறும் இரண்டு கூம்புகள் மட்டும் ஏற்றப்பட்டிருந்தால், புயல் எச்சரிக்கை தொடர்பான தகவல்கள், துறைமுகத்துக்குக் கிடைக்கவில்லை என்றும் பொருளாம்.
ஒரு கடற்கரை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பல் மற்றும் துறைமுகத்தைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு சமிக்ஜை காட்டுவதற்காக ஏற்றப்படுவதுதான் இந்த புயல் எச்சரிக்கை குண்டுகள். உருளையாகவும் கூம்புகளையும் இரண்டையும் இணைத்து இந்த சமிக்ஜைகள் ஏற்றப்படும்.
1864ஆம் ஆண்டு கொல்கத்தா மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகங்கள் அடுத்தடுத்து புயல்களில் சிக்கின. அப்போதுதான், புயல் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கொல்கத்தாவில் நாட்டிலேயே முதல் புயல் எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1898ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், இந்திய துறைமுகங்கள் அனைத்திலும் ஒன்றுபோல புயல் எச்சரிக்கை அமைப்பு பயன்பாட்டுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.