

மோந்தா புயல் எதிரொலியால் 100 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.
இது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு - வடமேற்கு திசையில் 50 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழையால் ஆந்திரத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அக். 31ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனால், பயணிகள் பாதுகாப்பு கருதி தெற்கு மத்திய ரயில்வே சார்பில் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிழக்கு கடற்கரை ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மோந்தா புயல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ரயில் நிலையை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்புடன் இருங்கள் எனப் பதிவிட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
ஆந்திரத்தில் பெய்துவரும் தொடர் மழையால் விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி பகுதிகளை இணைக்கும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.
புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் நிலையை சரிபார்த்துக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கணக்கிட்டு விமான நிலையத்திற்கு பயணிக்கும் நேரத்தை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மறுமுன்பதிவு செய்வதில் பயணிகளுக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விஜயவாடா கங்காவரம் சர்வதேச விமான நிலையம் இதுவரை 30 விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதேபோன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு வழித்தடங்களை இணைக்கும் விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதையும் படிக்க | மழை அளவு கணக்கெடுப்பு நேரத்தில் மாற்றமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.